2414.

     அலைஓய் கடலில் சிவயோகம்
          மேவிய அந்தணர்தம்
     நிலைஓர் சிறிதும் அறியேன்
          எனக்குன் நிமலவருள்
     மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்
          கொலோபொன் மலைஎன்கின்ற
     சிலையோய் வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     புள்ளிருக்கு வேளூர்த் தலைவனாகிய தேவ சிகாமணியே, பொன்மலை என்று புகழப்படுகிற மேருவை வில்லாகவுடையவனே, அலையடங்கிய கடல்போல அமைதி கொண்டு சிவயோகம் புரிகின்ற பெருமக்கள் நிலைமையை யான் ஒரு சிறிதும் அறியேன்; ஆகவே எனக்கு உனது தூய அருளாகிய மலைபோல் உயர்ந்த ஞானவாழ்வு எய்துமோ? அறிகிலேன். எ.,று.

     பொன்னிறமுடையதாகலின், மேருமலை பொன்மலை எனப் பெரியோர்களால் குறிக்கப்படுகிறது. சிலை - வில். அலையோய் கடல் - காற்றால் அலைப்புண்ணாமல் - அமைதி கொண்டிருக்கும் கடல். கடல்போற் பெருகிய ஞானம் நிறைந்த சிவயோகியரை, “சிவயோகம் மேவிய அந்தணர்” என்று கூறுகின்றார். அந்தணர் - முற்றத் துறந்த முனிச் செல்வர்களாகிய மாதவர். உயிரறிவைப்பற்றி நிற்கும் மலவிருள் கெடுதற் பொருட்டு இதனைச் செய்கிறார்களென்றும், இறைவனும் அம்மலவிருளைத் தீர்த்துத் தனது திருவருளைக் கொடுக்கின்றான் என்றும் திருஞானசம்பந்தர் தெரிவிக்கின்றார்; “கள்ளில் மேயான் மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே” என அவர் கூறுவது காண்க. சிவயோகத்தாற் பெறப்படுவதாகிய நினது திருவருள்நெறி அறியாத எனக்கெய்துமோ என ஐயுறுகின்றேன் என்பாராய், “எனக்கு உன் நிமலவருள் வாழ்க்கை வாய்க்குங் கொலோ” என முறையிடுகின்றார். நிமல அருள் - தான் மலக்கலப்பின்றித் தன்னை எய்துவாருடைய மலத்தைத் தீர்க்கும் திருவருள். மலை; பெருமை யுணர்த்தும் குறிப்புச் சொல்லாய் வந்தது. “மல்லல் மலையனைய மாதவர்” (சீவக. 2789) என்றாற்போல.

     இதனால் சிவயோகப் பெருவாழ்வில் தமக்குள்ள விருப்பத்தை வள்ளற் பெருமான் தெரிவிக்குமாறு காணலாம்.

     (12)