2415.

     ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும்
          மேவி உறும்பிணியால்
     நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய்
          வயித்திய நாதஎன்றே
     வான்கொண்ட நின்அருள் சீரேத்து
          கின்ற வகைஅறியேன்
     தேன்கொண்ட கொன்றைச் சடையாய்
          அமரர் சிகாமணியே.

உரை:

     தேன் துளிக்கும் கொன்றைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த சடையையுடைய பெருமானே, தேவர் சிகாமணியே, ஊனாலாகிய உடம்பிலும், உள்ளத்திலும் தோன்றி வருந்துகின்ற நோய் வகையால் நான் அடைந்துள்ள துன்பத்தைப் போக்கியருள வேண்டும்; ஆனால் புள்ளிருக்கு வேளூர் வயித்திய நாதனே என்று நினைத்தும் வாழ்த்தியும் பெருமைதங்கிய நின் புகழை ஓதுகின்ற நெறி முறைகளை அறியாமல் இருக்கின்றேன்; அருளுவாயாக. எ.று.

     புதிது மலர்ந்த பூவால் தொடுக்கப்படுவது தோன்ற, “தேன் கொண்ட கொன்றை” என்று தெரிவிக்கின்றார். கொன்றை மாலை. ஊன் கொண்ட தேகம் - ஊனுடம்பு. உடற் பிணியாலும் மன நோயாலும் உண்டாகிய துன்பத்தை, “ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவியுறும் பிணியால் நான் கொண்ட துன்பம்” என விரித்துரைக்கின்றார். உடற் பிணி செயல் ஆற்றலையும், மனநோய் சிந்தனையாற்றலையும் சிதைப்பதால், “நின் அருள் சீரேத்துகின்ற வகை யறியேன்” என்று விளம்புகின்றார். வான் - பெருமை. அருட் சீர் - உயிர்கட்குச் சிவபெருமான் அருள் புரியும் மாண்பு.

     இதனால், பிணி வகையால் உண்டாகும் இடர்ப்பாடுகளைத் தெரிவித்தவாறாம்.

     (13)