2421. கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
கனிந்தகனி யாச்செய்யலாம்
கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
கரடிபுலி சிங்கமுதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்
மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
ஈகின்ற பெண்கள் குறியே
எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
எத்துணையும் அரிதரிதுகாண்
வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: மாதவச் சிகாமணி உலகநாதத் தம்பிரானாகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும், புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, கருங் கல்லையும் நீராய் உருக்கி விடலாம்; அக் கல்லில் நாரும் உரித்தெடுக்கலாம்; பழுத்த பழமாகவும் அக் கல்லிற் செய்யலாம்; கொடிய விடத்தை உண்ணலாம்; அதனையே யாவரும் உண்ணும் அமுதமாகவும் செய்யலாம்; கொடிய புலி கரடி சிங்கம் முதலாகவுள்ள பிற விலங்குகளை எளிதில் வெல்லும் விலங்குகளை நம் வயமாக்கி விடலாம்; அன்றியும் அவற்றைக் குரங்குகளைப்போல வித்தை காட்டவும் செய்யலாம்; தண்மை மிக்க வாழைத் தண்டையும் விறகாய் எரிக்கலாம்; நுண்ணிய மணலையும் பெருமை பொருந்திய தேர்க்கு வடமாகத் திரிக்கலாம்; ஆனால், ஒரு தெய்வமும் கிடையாது; வேறு யாதும் இல்லை; எங்கட்கு இன்பம் தருகின்ற பெண்களின் அல்குலே குலதெய்வமாகும் என்று கருதிப் பேசுகின்ற மூட மக்களைத் தெய்வசிந்தனை யுடையவர்களாக்குவது பெரிதும் அரிதாகும்; அவர்களின் மூடக் கொள்கையாகிய நோய் விரைவில் நீங்க ஞானமாகிய நன்மருந்து அருள்க. எ.று.
எரிமலைகளில் கற்களெல்லாம் உருகி எரிகுழம்பாய் வெளிவருவதை யறிகிறோமாதலின், “கல்லையும் உருக்கலாம்” எனவும், சிற்பத் தொழில் செய்பவர், கல்லிற் சங்கிலித் தொடர்களைச் செய்திருப்பதைக் காண்கின்றோமாதலால், “கல் நார் உரிக்கலாம்” எனவும் கூறுகின்றார். மாணிக்கவாசகரும் “கல் நார் உரித்தென்னை யாண்டு கொண்டான்” (பூவல்லி) என்பது காண்க. “கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பனாக்கினாய்” (சதகம்) என்று அவரே கூறுவதால், கல்லைக் “கனிந்த கனியாகச் செய்யலாம்” என வுரைக்கின்றார்.
கடல் விடத்தைச் சிவபெருமானே உண்டதனால், அவனுக்கு அடியவர்களாகிய நாமும் உண்ணலா மென்ற துணிவு பிறத்தலால், “கடல் விடமும் உண்ணலாம்” எனவும், தொண்டராகிய திருநாவுக்கரசர் நஞ்சை அமுதாக வுண்டாரென அவருடைய வரலாறு தெரிவிப்பதால் “அமுதாக்கலாம்” எனவும் கூறுகின்றார். “வழக்கிலா அமணர் தந்த நஞ்சமுதாக்கு வித்தார்” (நனிபள்ளி) என நாவுக்கரசரே நவில்கின்றார். கரடி புலி முதலிய கொடிய விலங்குகளை வசமாக்கலாம்; சிங்கத்தின் முதுகின்மேற் கொள்ளலாம் என்று தாயுமானார் முதலிய பெரியோர்கள் உரைப்பதால் “கொடுங் கரடி புலி முதலா வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்” என்று கூறுகின்றார். வாழைத் தண்டை விறகாக்கினர், மணலைக் கயிறாகத் திரித்தனர் என்றெல்லாம் உலகவர் பேசுவ துண்மையால் “மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடமாக்கலாம்” என விளம்புகின்றார். காம வின்பம் தரும் பெண்ணல்லது தெய்வம் வேறில்லை என்னும் பேதைகள் இன்னும் இருப்பதால், அவர்களை “இல்லையொரு தெய்வம், வேறிலை எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும் மூடர்” என இழித்துரைக்கின்றார். திருவருளாலன்றி அம் மூடர்க்கு அறிவு விளக்கமுறாது என்பதுபற்றி, அவர் “உணர்வற மருந்தருள்க” என வேண்டுகிறார்.
இதனால் பெண்களே தெய்வமெனப் பேணும் பேதை யுணர்வு நீங்க ஞானமாகிய மருந்தருள்க என விண்ணப்பித்தவாறாம். (4)
|