2422. படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
பழுத்தபழ மோபூசுணைப்
பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
பாழாகு கின்றார்களோர்
பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
பித்தேற்ற தோஅறிகிலேன்
செடி அளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
தெரிந்திடக் காட்டிநகைதான்
செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
செம்மாப்பர் அவர் வாய்மதம்
மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: தவத்தோர்க்குச் சிகாமணியாகிய உலகநாதத் தம்பிரானாகிய அருள் வள்ளலின் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும் புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, ஒரு படியளவான சாம்பலை யெடுத்து முகத்திலும் உடம்பிலும் பூசிக் கொண்டு, காண்பவர் இவர் நன்கு பழுத்த சைவப் பழமோ பூசுணைப் பழமோ என வியந்து சொல்லுமாறும், கருங்கற் போல மேனி யசையாமலும் இருந்து பாழாகின்றார்கள்; ஒரு பிடியளவு தானும் சோறுண்ணுதலில்லை; பெண்களையும் விரும்புவதில்லை; பேய் கொண்டார்களோ, நோய் கொண்டார்களோ, பெரும் பித்தேறினவரோ என்பது அறிய வொண்ணாதபடி சிலர் வாய்ப்பல்லில் ஒரு செடியுயரம் அழுக்கேறியிருப்பது யாவரும் காணக் காட்டி நகைத்து, வளையாத செவ்விய மரக்கட்டை போலச் செம்மாந்திருக்கின்றார்கள்; அவர்பால் எய்தியிருக்கும் செருக்கு நீங்கும்படி திருவருளாகிய மருந்தினை அருளுவாயாக. எ.று.
படியளவு என்பது மிக்க சாம்பல் என்பதுபட நின்றது. சிவந்த மேனியில் திருநீறு பூசி யிருப்பது விளங்கப் பூசுணைப் பழத்தை உவமம் செய்கின்றார். இருந்த விடத்தினின்றும் அசையாமல் இருப்பதைக் “கருங்கற் போல் அசையாது பாழாகின்றார்கள்” என்று கூறுகின்றார். இதன்மேல் உண்ணாநோன்பும் பெண்ணாசை யின்மையும் கொண்டு பிறங்குவது புலப்பட, “பிடியளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு பெண்ணையெனினும் கொள்கிலார்” என்று பேசுகின்றார். உணர்விழந் துள்ளார்களோ என்றற்குப் “பெரும் பித்தேற்றதோ” என இசைக்கின்றார். செடியளவு என்றது வாய்ப்பல்லின் மேல் மிக்க அழுக்கேறி நாற்றம் கொண்டிருப்பது உணர்த்துதற்கு என்க. செம்மரத் துண்டு - பட்டை நீங்கி மறுவின்றி யிருக்கும் வலிய மரக்கட்டை. செம்மாத்தல் - செருக்குறுதல். அவர் வாய் மதம் - அவர்பாற் காணப்படும் மதர்ப்பு.
இதனாற் போலி வேடமும் துறவும் மோனமு முடையராய் மக்களை ஏமாற்றித் திரிவதுடன் உண்மையாளர்களை இகழ்ந்து பேசுபவர்களின் மன மயக்கம் தீர ஞானம் அருளுக என வேண்டியவாறாம். (5)
|