2423. பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
பேர் ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
பெறவே விரும்பிவீணில்
ஊண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
பசை அற்று மேல்எழும்பப்
பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
பாவம் இவர் உண்மைஅறியார்
கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
காட்டிச் சிரித்துநீண்ட
கழுமரச் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
கயவர்வாய் மதமுழுதுமே
மண்கொண்டு போகஓர்மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: தவம் புரிபவர்க்குச் சிகாமணி உலகநாதத் தம்பிரானாகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும் புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, பெண்களோடு கூடிப் பெறும் சுகவாழ்வே உலகியலிற் கண்கண்ட பயனாகும்; இதனைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் சில பேர், பேரும் ஊருமில்லாத வெற்ற வெளியில் இருந்து மேலான இன்பம் பெற விழைந்து வீணாக அழகிய தமது உடல் வெளுக்க, உள்ளே யுற்ற நரம்புகளனைத்தும் பசையிழந்து மேலே எழும்பித் தோன்றப் பட்டினி கிடந்த சாகின்றார்கள்; இவருடைய பாவத்தை என்னென்பது; இவர்கள் உண்மை நெறியறியாதவராவர்; கண்ணிருந்தும் குருடராவர் என்றெல்லாம் இகழ்ந்து பேசி, வாய்ப்பற்கள் வெளியே தெரியும்படி சிரித்து, நீண்ட மரக்கட்டைபோல் நிற்கின்றார்கள்; இக் கீழ்மக்களின் வாய்மதமாகிய நோய் முற்றும் கெட்டொழியுமாறு ஒரு தனி மருந்து நல்குவாயாக. எ.று.
பிடித்தல் - கடைப் பிடித்தல். வெற்ற வெளி - வெறு வெளியெனப் படுகிறது; நாட்டவர் இதனை வெட்ட வெளியென வழங்குவர். பண் கொண்டவுடல் - செம்மை நிலையால் அழகு பொருந்திய உடம்பு. உண்ணாது நோற்கும் பெரியோர்களைப் பார்த்து இகழ்பவர், இகழ்ந்துரைக்கும் திறத்தை, “பட்டினி கிடந்து சாகின்றார்கள்; ஈதென்ன பாவம், இவர் உண்மையறியார்” என வுரைக்கின்றார்கள் என்று விளக்குகிறார். கண்ணில்லாரைக் குருடர் என்பதிருக்க, இவர்கள் கண்ணுடைய குருட ரென்பார், “கண் கொண்ட குருடரே” எனப் பழிக்கின்றார்கள் என்கிறார். தலை கூரிதாய் நெடிதுயர்ந்த மரத்தைக் கழுமரம் என்பது வழக்கம். கயவர் - கீழ்மக்கள். கயவரது கீழ்மையுரை உண்டாகாவாறு மறைந்தொழிய வேண்டுமென்றற்கு “மண் கொண்டு போக” வேண்டுமென இறைஞ்சுகின்றார்.
இதனால், கயவரது கயமை யுரைகள் முழுதும் கெட்டு மறைந்திட அருள் புரிக என வேண்டியவாறாம். (6)
|