2424.

     திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
          தியங்குவீர் அழியாச்சுகம்
     சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
          சேரவா ருங்கள் என்றால்
     இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
          இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
     இல்லையா யினும் இரவு பகல்என்ப தறியாமல்
          இறுகப்பி டித்தணைக்கப்
     பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
          பெண்ணகப் படுமாகிலோ
     பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
          பிறகிதோ வருவம்என்பார்
     வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
          மணிஉலக நாதவள்ளல்
     மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
          வளர்வயித் தியநாதனே.

உரை:

     தவத்தோர் சிகாமணி உலகநாதப் பிரானாகிய வள்ளல் மனம் மகிழ்ச்சியடையவும், மெய்யன்பர்களின் பிறவிநோய் நீங்கவும், புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, குற்றமற்ற நெறியறியாமல் மயங்குகின்றவர்களே, திருந்திய ஞானமுடைய சான்றோர் அருளால் அழியாத இன்பம் நிறைந்த வீட்டுலகமாகிய பரமபதத்தை அடையும் நன்னெறி மேற்கொண்டு திரண்டு வருக என்று சொல்லுவோமாயின், விருப்பத்துடன் கேட்பது போல இருந்து, எமக்குக் காலந்தோறும் இனிய உணவு வேண்டும், அணி வகைகளையும் ஆடை வகைகளையும் எளிதில் பெறஅளிக்கும் நல்ல இடம் வேண்டும்; இவைகளெல்லாம் ஓரளவு இல்லையானாலும், இரவும் பகலும் ஓய்வின்றி இறுகப்பற்றி அணைத்து மகிழ, பெருத்த முலையும் இளமைச் செவ்வியும் அழகுமுடைய பெண்கள் கிடைப்பார்களானால், சொல்லுக; அத்தகைய பரமபதத்துக்கு உமக்குப் பின்னேயே இதோ வருகின்றோம் என்று சொல்லிப் பழிக்கின்றார்கள்; அவர்களால் மக்களினத்துக் குண்டாகும் துன்பம் அறவே ஒழிந்துகெட ஞானமாகிய மருந்தினை அருள்வாயாக. எ.று.

     அறிவறியாமையால் குற்றமிகுந்து வருத்துகின்ற இவ்வுலகம் என்பார், “இந்த உலகம்” என்று சுட்டுகின்றார். உலகறி சுட்டாகிய இகரச் சுட்டு, “இந்த” என வந்தது. திருந்திய சிந்தையையுடைய சான்றோர்களைத் “திருத்தமுடையோர்” என்று கூறுகிறார். தாம் திருந்தியிருப்பதோடு பிறரும் தம்போற் திருந்திய வாழ்வுடையராதல் வேண்டுமென விரும்புவோர் எனவும், “திருத்தமுடையோர்” என்ற தொடர் பொருள்பட நிற்பதறிக. தெளிவுக்காட்சி யில்லாமையால் மக்கள் துன்ப மடைகின்றார்களாதலால், “தியங் குவீர்” எனக் குறித்துப் பேசுகின்றார். தியங்குதல் - அறிவு மயங்குதல். அந்தமில் இன்பத்து அழிவில் வீடு எனப்படுவதுபற்றி, “அழியாச் சுகம் சேருலகமாம் பரமபதம்” என்று உரைக்கின்றார். சேர வருதல் - திரண்டு வருதல், “சேர வாரும் செகத்தீரே” எனத் தாயுமானார் வழங்குவது காண்க. இருந்து இனிய என்பது 'இருத்தினிய' என வந்தது. நாள் முழுதும் இடையறவின்றிக் கூடுவதை; “இரவு பகலென்ப தறியாமல்” என விளங்கவுரைக்கின்றார். உண்டென உறுதி கூறுமின் என்றற்குப் “பேசிடீர்” என்கின்றார். நுமது பின்னே என்பார், 'நும் பிறகு' என்றும், விரைவு தோன்ற “இதோ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், காமுகர் செருக்கடங்க, ஞானமருந்தருள விண்ணப்பித்தவாறாம்.

     (7)