2425. பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
பேச்சிவை எலாம்வேதனாம்
பித்தன் வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
பெரும்புரட் டாகும் அல்லால்
ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
ஒருசிறிதும் இல்லை இல்லை
உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
உலர்ந்தீர்கள் இனியாகினும்
மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
விரைமலர்த் தொடைஆதியா
வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
விளையாடு வீர்கள்என்பார்
வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: தவத்தோர் சிகாமணி உலகநாதத் தம்பிரானாகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவி நோய் நீங்கவும், புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, “பேதைமை பொருந்திய உலகத்தவர்களே, விரதம் ஏது? தவம் ஏது? இவற்றைப்பற்றிப் பேசுவதெல்லாம் வீணாகும்; பிரமன் என்னும் பித்தன் ஒருவன் பித்துற்று வாய்தவறிக் கத்திய நூல் உரைக்கும் பெரும் புரட்டுரைகளாகுமேயன்றி, முழங்குகிற உலகாயத நூல் கூறும் உண்மை போல் பிறவெல்லாம் சிறிதும் உண்மைகள் அல்லவே யல்ல; உள்ள உண்மையறியாமல் இலவு காத்த கிளிபோல் விரதங்களால் உடம்பு மெலிந் தொழிந்தீர்கள்; இனியாகிலும் மேம்பட்ட உணவு பலவற்றையும் உண்டு, மணம் கமழும் மலர் மாலைகளால் அலங்கரித்துக் கொண்டு, மணி மேடை மேல் இருந்து, இளம்பெண்களுடன் கூடி விளையாடி இன்புறுவீர்களாக” என்று எடுத்தோதி வாதிடும் மக்களின் சேர்க்கையாகிய நோய், எமக்கு உண்டாகாதபடி ஒரு திண்ணிய மனமாகிய மருந்தினை அருள்க. எ.று.
பேதை யுலகீர் - மூடத்தன்மை பொருந்திய உலகத்தவர்களே, உலகர் என்பது உலகீர் என விளியேற்றது. விரத மெனவும் ஞானமெனவும் உரைத்து வேதவுரைகளை எடுத்துக் காட்டிப் பேசுவது வீணாகும் என்றற்கு, “விரதம் ஏது தவமேது வீண் பேச்சு” எனவும், இவை பிரமனால் ஓதப்பட்ட வேதங்கள் என்பது பித்தேறிப் பிதற்றிய புரட்டுக்களாம் என்பார், “இவையெலாம் வேதனாம் பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய பெரும் புரட்டாகும்” எனவும், இவையனைத்தும் உலகாயத நெறிக்குரிய உண்மைநூற் கருத்துக்கள் போல் ஆகா என வற்புறுத்தற்கு, “ஓதையுறும் உலகாயத்தினுள உண்மைபோல் ஒரு சிறிதும் இல்லையில்லை” எனவும் உரைக்கின்றார்கள். பித்தன் - பித்துக்கொண்டவன். கத்துதல் - பொருளின்றி ஆரவாரமாகப் பேசுவது. புரட்டு - பெரிய பொய்யுரை. உண்மைப் பொருளுரையால் விளக்கமுறுவ தென்றற்கு, உலகாயத நூலை, “ஓதையுறும் உலகாயதம்” எனவுரைக்கின்றார். உண்மை தெரியாமல் விரதங்களை மேற்கொண்டு உண்ணா நோன்பு வகைகளால் உடல் இளைத்துக் கெடுகின்றீர்கள் என்பாராய், “உள்ளது அறியாது இலவு காத்த கிளிபோல் உடல் உலர்ந்தீர்கள்” என்று கூறுகின்றார்கள். இலவ மரத்தின் காயைப் பார்த்துப் பழுக்கட்டும் எனக் காத்திருந்து, அது பஞ்சாய் வெடிப்பது கண்டு ஏமாறும் கிளிகளைப்போல, விரதங்களால் ஞானமெய்திப் பேரின்பம் பெறலாம் என்று எண்ணி முயன்று முடிவில் இம்மையின்பம் ஏதுமின்றி இறக்கப்போகின்றீர்கள் என விளக்கியவாறாம். மேதை யுணவு - ஞானம் நல்கும் நல்ல சுவை நிறைந்த உணவு. இன்பப் பொருள்களைக்
காட்டற்கு “விரைமலர்த் தொடையாதி” என்கின்றனர். விரை - நறுமணம். தொடை - மாலை. இம்மையிற் பெறலாகும் இன்பத்தை நன்கு நுகர்தல் வேண்டுமெனற்கு, “மேடைமேல் பெண்களோடு விளையாடுவீர்” என்று விளம்புகின்றார்கள். வாதை - துன்பம்; வாத வுரைகளால் உளதாகும் வருத்தம். சார்பு - சேர்க்கை; உறவுமாம்.
இதனால், விரத ஞானங்களை மறுத்துரைக்கும் வாதங்களால் தோன்றும் இடுக்கண் நீங்க மனவுறுதி நல்குக என வேண்டிக் கொண்டவாறாம். (8)
|