2426.

     ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
          எண்ணிநல் லோர்கள் ஒருபால்
     இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ணீர்
          இறைப்பஅது கண்டுநின்று
     ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
          நம்உலகில் ஒருவர் அலவே
     ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
          நகைப்பர்சும் மா அழுகிலோ
     ஊனம் குழித்தகண் ணாம்என்பர் உலகத்தில்
          உயர்பெண்டு சாக்கொடுத்த
     ஒருவன் முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
          உளறுவார் வாய்அடங்க
     மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
          மணிஉலக நாதவள்ளல்
     மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
          வளர்வயித் தியநாதனே.

உரை:

     தவத்தோர்க்குச் சிகாமணியாகிய உலகநாதத் தம்பிரான் சுவாமிகளின் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிநோய் தீரவும், புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, குற்றம் மிகுவிக்கின்ற மனத்துன்பம் நீங்கும் பொருட்டு நின் திருவருளை வேண்டுகின்ற மெய்யன்பர்கள் ஒருபால் இறைவன் திருமுன்பு நின்று 'ஆண்டவனே நின் திருவடிக்கு எம் வணக்கமெனத் துதித்துக் கண்ணீரொழுக நிற்பாராயின், அது கண்டும் ஞானமுதிர்வால் கண்ணீர் ஒழுகுவது நோக்கியும், இவர் நம்முலகத்து ஒருவரல்லர்; இவர் ஒரு மெய்ஞ்ஞானி; நம்மைப்போல் தாய் வயிற்றில் தோன்றியவரல்லர் என்று சொல்லி நகையாடுவர்; வெறிதே கண்களில் நீர் ஒழுகுமாயின், ஊனமுடைய கண் போலும் என்றும், உலகில் உயர்ந்த மனைவியைப் பறிகொடுத்தவன் முகம்போல்கிறது இவர் முகம் என்றும், தம் வாயில் வந்தபடியெல்லாம் சிலர் பேசுகின்றார்கள்; இவர்களின் பேச்சு ஒடுங்குமாறு பெருமைமிக்க மருந்தொன்று அளித்தருள்வாயாக. எ.று.

     ஈனம் - குற்றம். மனவாதை - மன நினைவுகளால் உண்டாகும் துன்பம். மனம் செம்மையுறுமானால் துன்பம் பலவும் நீங்குமாதலால், நல்லறிஞர் இறைவன்பால் முறையிட்டு வருந்துவராதலின், “நின்னருளை யெண்ணி ஒருபால் நல்லோர்கள் நின் தோத்திரம் இயம்பி இருகண்ணீர் இறைப்ப” என இயம்புகின்றார். கண்களில் நீர் பெருக்குவதை “இரு கண்ணீர் இறைப்ப” என்கின்றார். நல்லோர் கண்களில் ஞானவொளி திகழ்வது காண்டலும், 'இவர்கள் ஞானிகள் போல்கின்றனர்; நமது உலகத்தவர் அல்லர்; நம்மைப்போலத் தாய் வயிற்றிற் பிறந்தவரல்லர்' என இகழ்கின்றவர் சிலர் உள்ளனராதலால், அவர்களை, “ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்றது நீர்; நம்முலகில் ஒருவர் அல்லர்; ஞானியிவர் யோனிவழி தோன்றியவரோ என நகைப்பர்” எனவுரைக்கின்றார். யோனி - மகப் பேற்றுக்குரிய உறுப்பு. தோத்திரம் ஒன்றும் உரைக்காமல், மனத்தால் வேண்டிக் கண்ணீர் சொரிபவரைக் கண்டால் சிலர், இவர் கண்ணிற் குறையுடையவர் போலும் என்றும், இவர் மனைவி இறந்ததால் வருந்துகிறவர் முகத்தைக் கொண்டிருக்கின்றார் என்றும் எள்ளி, வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகின்றதை எடுத்துரைப்பாராய், “சும்மா அழுகிலோ ஊனம் குழித்த கண்ணாம் என்பர்” எனவும், “உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது” எனவும், வள்ளற் பெருமான் உரைத்துக் காட்டுகின்றார். ஊனத்தால் குழித்த கண் - ஊனம் குழிந்த கண் எனப்படுகிறது. சாக்கொடுத்தல் - சாவக் கொடுப்பது. உளறுதல் - பொருளில்லாமல் வாய் தவறுவது. மானம் - பெருமை.

     இதனால், இறைவன் திருமுன்பு கண்ணீரும் கம்பலையுமாய் நின்று வழிபடுவோரை இகழ்ந்து பேசுவோர் மனம் மாறும்படி அருள்க என முறையிட்டவாறாம்.

     (9)