2427. கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
காண்பதே அருமை அருமை
கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
கருணையால் அவர்வலியவந்
திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
ஏமாந்தி ருப்பர் இவர்தாம்
பொற்பினது சுவைஅறியும் அறிவுடையார் அன்றுமேற்
புல்லாதி உணும்உயிர்களும்
போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
புறச்சுவர் எனப்புகலலாம்
வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: நிலைபெறும்படியாக அறநெறியைச் செலுத்திக் காட்டியுயரும் தவத்தோர் சிகாமணியாகும் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழும்படியாகவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி போகவும், புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, கற்றற்குரிய நன்னூல்களைக் கற்றுணர்ந் தொழுகும் பெரியோர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வறியவன் ஒருவன்பால் கற்பதரு வந்ததுபோல, அருள்மிகுதியால் அப்பெரியோர்கள் தாமாகவே வலிய வந்து மனைப்புறத்தே நிற்பாராயின், விரைந்து எழுந்து அவர்பால் ஓடிக் கைகளால் தொழுது தங்கட்கு உறுதியானவற்றைக் கேட்டறிந்து கொள்ளாமல், கண்ணில்லாத குருடர்போலச் சிலர் ஏமாந்தொழிகின்றார்கள்; இவர்கள் அழகிய சுவையாலும் அறியும் அறிவுடையவராகார்; மேலும், புல் முதலியவற்றை மேய்ந்துண்ணும் விலங்குகளுக்கும் ஒப்பாகார்; இவர்களைக் கூரையெல்லாம் போய்ப் பாழ்பட்ட வீட்டின் புறத்தே நிற்கும்ட் குட்டிச்சுவர் என்று சொல்லலாம். எ.று.
வடலூர் வள்ளற் பெருமான் காலத்தில் கற்றவர் தொகை மிகக் குறைவாக இருந்தமையின், “கற்பவையெலாம் கற்றுணர்ந்த பெரியோர் தமைக் காண்பதே அருமை யருமை” என்று கூறுகின்றார். கற்பதரு - தன்னையடைந்தவர் விரும்பியதை யளிக்கும் தேவருலகத்து மரம். மிடியன் - வறியவன். மிக அருமை வாய்ந்த பெரியவர், சென்று வலம் வந்து வணங்கி அழைத்தற்குரியராவர்; அவர் தாமே வலிய வருவாராயின், அஃது எவ்வளவோ உயர்ந்தபேறு என்பாராய், “கருணையால் அவர் வலிய வந்து” எனவும், அவர்களை அன்புடன் பணிந்து வரவேற்பது கடன் என்பார், “கடிது எழுந்துபோய்த் தொழுது” எனவும், வீண் பொழுது போக்காமல் தங்கட்கு வேண்டிய உறுதியுரைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுபற்றி, “தங்கட்கு இயலுறுதி வேண்டாது கண் கெட்ட குருடர்போல் ஏமாந்திருப்பர்” எனவும் இயம்புகின்றார். “பொன்னே கொடுத்தும் புணர்தற்கரியாரை, கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ, பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல, நயமில் அறிவினவர்” (நாலடி) என்று பெரியோர் கூறுவது காண்க. “நல்ல நயமில் அறிவினவர்” என்றதை விளக்குவாராய், சுவையறியாத மக்களினத்தையும் சேர்ந்தவரல்லர், பசு எருமை முதலிய விலங்கினத்தையும் சேரார், இவர்களைப் பாழ்பட்ட குட்டிச்சுவர் என்னல் வேண்டும் என்கின்றார். “அறுசுவை யறியும் அறிவுடையரல்லர்; புல்லாதி யுணும் உயிர்களும் போன்றிடார்” என்றும், “கூரை போய்ப் பாழாம் புறச்சுவர்” என்றும் இயம்புகின்றார். வற்புறுதல் - வலி மிகுதல்.
இதனாற் சால்புடைய பெரியோர்களைப் போற்றி வழிபடாத கீழ் மக்களின் கீழ்மை நீங்க வேண்டுமென முறையிட்டவாறாம். (10)
|