2428. மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
விளம்பஎனில் இவ்வுலகிலோ
மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
மேவுமண் ணெனினும்உதவக்
கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
களவுகட் காமம் முதலாக்
கண்டதீ மைகள் அன்றி நன்மைஎன் பதனைஒரு
கனவிலும் கண்டறிகிலார்
ஐயோ முனிவர் தமை விதிப்படி படைத்தவிதி
அங்கைதாங் கங்கைஎன்னும்
ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
வசுத்தநீங் காதுகண்டாய்
மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: ஓர் அணுவளவும் குற்றமில்லாத தவத்தோர் சிகாமணியாகிய உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழ் வெய்தவும், மெய்யன்பர்களின் பிறவிநோய் நீங்கவும், புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, மெய்ம்மைப் பொருள்களை யுரைக்கச் சிறிதளவும் அறியாராய், பொய்க்கதையாயின் இவ்வுலகில் உள்ள காலமேயன்றி மேலுலகிற்குச் சென்றாலும் சிறிதும் அஞ்சாமல் பேசுகின்றார்கள்; தெரு மண்ணாயிருப்பினும், பிறர்க்கு உதவக் கையை நீட்டவோ மனத்தால் நினைக்கவோ ஒரு சிறிதும் உடன்பட மாட்டார்கள்; கொலை செய்தல், கட் குடித்தல், பிறர் பொருளைக் களவாடுதல், காம நுகர்தல் முதலியவாகக் கூறப்பட்ட தீமைகளையேயன்றி, நல்ல தென்பதைக் கனவிலும் காண்பதிலர்; ஐயோ, முனிபுங்கவர்களை முறைப்படியே படைத்த பிரமதேவன் இவர்களைப் படைத்தமையால் உண்டான குற்றத்துக்காக, தனது அழகிய கைகளைக் கங்கையாகிய புண்ணிய நதியில் தோய்த்துக் கழுவினாலும், தீயில் அவன் மூழ்கி யெழுந்தாலும், அவன் கையிலேறிய அழுக்கு நீங்காது காண். எ.று.
மாசு மறுவில்லாத தவமுடையவர் என்று சிறப்பித்தற்கு, “மையோர் அணுத் துணையும் மேவுறாத் தவசிகாமணி” என வுரைக்கின்றார். மை - குற்றம். மேவுதல் - பொருந்துதல். மெய்ம்மைப் பொருள்களையே பிறர்க் குரைப்ப தறமென்பதை உலகவர் எண்ணுகின்றாரில்லை என்பதைக் கூற விரும்பும் வடலூர் வள்ளற் பெருமான், “மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார்” என்று கூறுகின்றார். தினைத்தனை -சிறிதளவு, சிறுமைக்குத் தினையையும் பெருமைக்குப் பனையையும் எடுத்துரைப்பது சான்றோர் மரபு. “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” (குறள்) எனச் சான்றோர் வழங்குவது காண்க. பொய் கூறுவதாயின் காலவளவு நோக்காமல் இம்மை மறுமை யிரண்டிலும் இடையறாமற் பேசுவர் என்பாராய், “பொய்க்கதை விளம்பவெனில், இவ்வுலகிலோ, மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்” என்கின்றார். பொய் கூறுவோர் இருமையும் துன்புறுவர் என அறவோர் கூறுவராயினும், அதைப் பொருட்படுத்த மாட்டார் என்றற்கு, “அஞ்சாது மொழிவர்” என அறிவிக்கின்றார். “மேலுலகில் ஏறுகினும்” என்பதனால் கீழாம் நரகம் புகுவரேயன்றி மேலுலகம் புகார் என்ற கருத்து வலியுறுகின்றது. பயனில்லாத சிறு பொருளாயினும் பிறர்க்கு ஈயாத வன்னெஞ்சர் என்பது விளங்க, “தெரு மேவு மண்ணெனினும் உதவக் கையோ மனத்தையும் விடுக்க இசையார்” என்று கூறுகின்றார். ஓகாரமும் உம்மையும் எண்ணுப் பொருளில் வந்தன. பொய்ம் மொழிதலை முன்னர்க் கூறினமையின், “கொலை களவுகள் காமமாகிய” நான்கையும் உரைக்கின்றார். கொலை முதலிய ஐந்தும் பிற குற்றங்களனைத்துக்கும் மூலமாதலால், “முதலாக் கண்ட தீமைகள்” என்று கூறுகின்றார். நன்மை - நற்செயல், பொய் கொலை முதலிய குற்றங்களை மறந்தும் நினைந்தறியாத தூய பெரு மக்கள் முனிபுங்கவர். அப் பெருமக்களைப் படைத்த பிரமதேவன் கை, இத் தீயவர்களைப் படைத்தமையால் அழுக்கேறியது; அவ்வழுக்கு நீங்க அவன் கங்கையாற்றிற் கழுவினும், தீயில் மூழ்கினும் எளிதிற் போகாது என்பார், “கங்கை யென்னும் ஆற்றிற் குளிக்கினும், தீ மூழ்கி யெழினும் அவ்வசுத்தம் நீங்காது” என்று கட்டுரைக்கின்றார்.
இதனால், உலகிற் பொய் கூறுவோர் கொடுமை நீங்க அருள் செய்க என வேண்டியவாறாம். (11)
|