2440.

     சேதப் படாத மருந்து - உண்டால்
          தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
     பேதப்ப டாத மருந்து - மலைப்
          பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. நல்ல

உரை:

     சேதம் - கேடு. எக்காலத்தும் வேறுபடுதலின்றி ஒரு தன்மைத்தாதலால் சிவத்தைப் “பேதப் படாத மருந்து” எனக் கூறுகின்றார். மலைப் பெண் - மலையரையன் மகளாகிய உமாதேவி. இடம் கொளல் - இடப்பாகத்தே கொள்ளுதல். திருவருள், சிவத்துக்குச் சத்தியாதல் பற்றி, “மலைப் பெண்ணிடம் கொண்ட மருந்து” என்கிறார் எனினும் அமையும்.

     (10)