2443.

     பால்வண்ண மாகு மருந்து - அதில்
          பச்சை நிறமும் படர்ந்த மருந்து
     நூல்வண்ண நாடுமருந்து - உள்ளே
          நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து. நல்ல

உரை:

     மேனி முற்றும் வெள்ளிய திருநீறணிந்து விளங்குவதால் “பால்வண்ணமாகும் மருந்து” என்று பரவுகின்றார். “பால் கொள் வெண்ணீற்றாய்” (அருட்) என மணிவாசகரும், “பால் நெய் யஞ்சுடனாட்ட முன்னாடிய பால்வண்ணன்” (மழபாடி) என ஞானசம்பந்தரும் ஓதுவர். பச்சை நிறமுடைய பார்வதியைத் திருமேனியிற் கொண்டது குறித்துப் “பச்சை நிறமும் படர்ந்த மருந்து” என்று கூறுகிறார். “பச்சை நிறமுடையர் பாலர் சாலப் பழையர்” (இடைமருது) என நாவுக்கரசர் உரைக்கின்றார். நூற் பயிற்சியுடையார் நூலாற் பெற்ற நுண்ணறிவால் வழிபாடு செய்ய அவர்க்கு அந்நெறியில் அருளுவதுபற்றி, “நூல்வண்ணம் நாடும் மருந்து” என்கின்றார். “நூலுடையான் இமையோர் பெருமான்” (கீழைத்திருக்காட்டு) என ஞானசம்பந்தர் நவில்கின்றார். அகக்கண் கொண்டு காண்பார்க்கு அருட்காட்சி நல்குவது கூறுதலால், “உள்ளே நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து” என வுரைக்கின்றார். “எண்ணொன்றி நினைந்தவர் தம்பால், உண்ணின்று மகிழ்ந்தவன்” (பனையூர்) என ஞானசம்பந்தர் உரைப்பர்.

     (13)