2446. ஏகவுருவா மருந்து - மிக்க
ஏழை களுக்கும் இரங்கு மருந்து
சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
சோதியென் றன்பர் துதிக்கு மருந்து. நல்ல
உரை: அன்பர் துதிக்கும் மருந்து என்பதில், அன்பர் எனப்படுபவர் மாணிக்கவாசகர் முதலியோர், “பாரோர் விண்ணோர் பரவி யேத்தும் பரனே பரஞ்சோதி வாராய்” (ஆசைப்) என்றும், “அமுதே ஊறிநின்றென்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருள்வாய்” (கோயில்) என்றும் அவர் துதிப்பது காண்க. (16)
|