2447. கோமளங் கூடு மருந்து - நலங்
கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து - நம்மை
நாமறி யும்படி நண்ணு மருந்து. நல்ல
உரை: கோமளம் - மென்மைப் பண்பும் அழகும் குறைவற நிறைந்த இளமை. துசம் - கொடி. நாம் அளவாத மருந்து - அளவைகளால் நாம் அளந்துகூற முடியாத அரும்பெரும் பொருள். “அளவியை யார்க்கும் அறிவரியோன்” என்று திருக்கோவையார் கூறுவது காண்க. நம்மை நாம் அறிதலாவது, நமது தன்மையையும், நம்மையுடையவனாகிய இறைவனையும், ஏனை உயிர்களையும், பிறவற்றையும் அவன் உடையவனாதலை யுணர்வது. “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார், எம்மை யுடைமை எமையிகழார்” எனச் சிவஞான போதம் கூறுகிறது. (17)
|