2453. காயாம்பூ வண்ண மருந்து - ஒரு
கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
தாயாங் கருணை மருந்து - சிற்
சதாசிவ மானமெய்ஞ் ஞான மருந்து. நல்ல
உரை: காயாம் பூவின் நிறத்தையுடைய திருமாலாயும், ஒரு தாமரையின்மேல் இருந்தருளும் பிரமனாயும் உலகைக் காத்தும் படைத்தும் சிவபெருமான் அருள்புரிவதுபற்றி, “காயாம் பூவண்ண மருந்து கஞ்சமலர் மிசைக் காணும் மருந்து” என்று கூறுகிறார். “அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான், அரனாய் அழிப்பவனும் தானே” (ஞானவுலா) எனச் சேரமான் பெருமாள் உரைப்பது காண்க. சதாசிவ நிலையில் ஞானமும் செயலும் ஒத்த அளவில் நின்று உயிர்கட்கு உண்மை ஞானம் உதவியருளுவது விளங்கச் “சிற்சதா சிவமான மெய்ஞ்ஞான மருந்து” எனப் புகழ்கின்றார். (23)
|