2461.

     இரங்கா திருந்தால் சிறியேனை
          யாரே மதிப்பார் இழிந்தமனக்
     குரங்கால் அலைப்புண் டலைகின்ற
          கொடிய பாவி இவன்என்றே
     உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான்
          உலகத் துயரம் நடிக்கின்ற
     அரங்காக் கிடப்பேன் என்செய்வேன்
          ஆரூர் அமர்ந்த அருமணியே.

உரை:

     திருவாரூரில் எழுந்தருளும் பெற்கரிய மணி போன்ற பெருமானே, நீ திருவுள்ளத்தில் என்பால் இரக்கம் கொள்ளாயாயின் சிறுமையுறும் என்னை யாவர் மதிப்பார்? கீழ்மைப்பட்ட மனமாகிய குரங்கால் வருத்தப்பட்டு வருந்துகின்ற கொடிய பாவியாவான் இவன் என்று சொல்லி, திருவருள் வலிமையை விரும்பி மேம்பட்டு பெரியோர் எள்ளி நகைப்பர்; அதனால், உலக வாழ்வு தரும் துன்பங்கள் நிறைகின்ற இடமாகி யான் செயலற்றொழிவேன். எ.று.

     மாணிக்க மணியின் நிறம் கொண்ட திருமேனியையுடைய பெருமானாதலின், திருவாரூர்ச் சிவபெருமானை, “ஆரூரமர்ந்த அருமணியே” என்கின்றார். திருவுள்ளம் இரங்கியருளுவன் என்ற எண்ணத்தால், “இரங்கா திருந்தால்” எனவும், திருவருட்பேறு எய்தாவிடின் தமக்கெய்தும் கீழ்மையைப் புலப்படுத்தற்கு “சிறியேனை யாரே மதிப்பார்” எனவும் கூறுகின்றார். மதிப்பிழந்த நிலையில், அருளாளர் காணினும், இவன், மனம் செலுத்தும் நெறியிற் சென்று துன்பத்துக்கு உறையுளாயினான் என இகழ்வர் என்பார், “இழிந்த மனக்குரங்கால் அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே உரம் காதலித்தோர் சிரிப்பார்” என வுரைக்கின்றார். மனத்தின் செயலும் குரங்கின் செயலும் ஒத்திருப்பது கண்டு, சான்றோர் மனத்தைக் குரங்குக்கு ஒப்பிடுவதுபற்றி, “மனக்குரங்கு” என்றும், ஒரு நெறியின்றி யெழும் நினைவுகள் துன்பமே எய்துவித்தலின், “அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி” என்றும் தம்மையே பழிக்கின்றார். நெறியின்றிச் செல்வது கொடுமையும் பாவமுமாதலின், “கொடிய பாவி” என்றும், திருவருளால் உண்டாகும் திண்மையுடையராய் விளங்கும் பெருமக்களை, “உரம் காதலித்தோர்” என்றும் இசைக்கின்றார். உரம் - திருவருள் ஞானத்தால் எய்தும் மனத்திண்மை. உண்மைக் காரண காரியங்களைக் கண்டு செயல் புரிபவராதலின், மனக்குரங்கால் துன்புறும் பாவியென்பதறிந்தே இகழ்வர் என்பதும் இதனால் குறிப்பது பெறப்படும். திருவருள் ஞானமும் திண்மையும் இல்லாவிடத்து மக்கள் உலகியல் நல்கும் துன்பங்களனைத்துக்கும் உறைவிடமாவர் என்பதுபற்றி, “உலகத் துயரம் நடிக்கின்ற அரங்காக் கிடப்பேன்” எனக் கூறுகின்றார். அரங்கு - ஆடரங்கு.

     இதனால், நின் திருவருள் எய்தாவிடின் யான் உலகியல் துன்பங்கள் போந்து கூத்தாடுதற்கு இடமாவேன் என்று முறையிட்டவாறாம்.

     (2)