2462.

     மணியார் கண்டத் தெண்டோள்செவ்
          வண்ணப் பவள மாமலையே
     அணியால் விளங்கும் திருஆரூர்
          ஆரா அமுதே அடிச்சிறியேன்
     தணியா உலகச் சழக்கிடையே
          தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
     திணியார் முருட்டுக் கடைமனத்தேன்
          செய்வ தொன்றும் தெரியேனே.

உரை:

     நீலமணி போலும் கழுத்தையும், எட்டுத் தோள்களையும், சிவந்த நிறமுமுடைய பவளமாகிய பெரிய மலை போலும் பெருமானே, இயற்கை யழகுகளால் மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளும் உண்ணா அமுதாகிய சிவபிரானே, கீழ்ப்பட்ட சிறியவனாகிய யான் குன்றாத உலக வாழ்க்கைத் துன்பங்களுக்கிடையே கிடந்து, ஊக்கம் குறைந்து வருந்துகின்றேன்; திணிந்த முருட்டுக் கட்டையினும் கடைப்பட்ட மனமுடையனாதலால் செய்வது ஒன்றும் தெரியாமல் மயங்குகின்றேன். எ.று.

     கழுத்து நீலமணியின் நிறத்தையும், மேனி சிவந்த பவள மணியையும் நிகர்த்தவனாதலால், சிவபெருமானை, “மணியார் கண்டத்துச் செவ்வண்ணப் பவளமலையே” என்று பரவுகின்றார். மருதவள மிக்கு பொழில்களாலும் செல்வத்தாலும் சிறப்புறுவது விளங்க, “அணியால் விளங்கும் திருவாரூர்” எனப் புகழ்கின்றார். தமது கீழ்மை நிலையைத் தெரிவித்தற்கு “அடிச் சிறியேன்” என்கின்றார். உலகியல் துன்பங்களின் மிகுதி பற்றித் “தணியா வுலகச் சழக்கு” என்றும், அவற்றால் மனநலமும் அறிவின் செம்மையும் உடம்பின் பண்பும் நிலைதளர்ந்து கெடுதல் புலப்பட, “கிடந்து தளர்ந்து தவிக்கின்றேன்” என்றும் கூறுகின்றார். உலகியற் சழக்கினால் தமது மனம், இளகும் தன்மை குன்றி, முட்டுக்கள் மிக்குற்று வலிதாகிய மரக்கட்டை போல்வதாயிற்று என்றற்குத் “திணியார் முருட்டுக்கடை மனத்தேன்” எனவும், அதனால் துன்பங்களைப் பொறுத்தாற்றி உய்தி காணும் நெறியறியாது வருந்தும் திறத்தை, “செய்வதொன்றும் தெரியேன்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால் உலகியல் துன்பங்களால் மனம் உருகும் இயல்பிழந்து முருட்டு மரக்கட்டை போலாயிற்றெனப் புலம்புகின்றார்.

     (3)