2463. தெரியத் தெரியும் தெரிவுடையார்
சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
பிரியப் பிரியும் பெரும்பாவி
அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
துரியப் பொருளே அணிஆரூர்ச்
சோதி மணிநீ தூயஅருள்
புரியப் பெறுவேன் எனில் அவர்போல்
யானும் சுகத்திற் பொலிவேனே.
உரை: துரிபாவத்தைக்கண் நின்று நோக்கும் பெருமக்கட்குக் காட்சி வழங்கும் பரம்பொருளே, அழகிய திருவாரூரில் எழுந்தருளும் ஒளிமிக்க மணிபோலும் சிவபெருமானே, நுணுகியாய்ந்தறியும் ஆராய்ச்சியாளர்கள் சிவானுபவத்தில் தோய்ந்து மேம்படுகின்றார்கள்; திருவருளிற் கூடாது பிரியின் பிரித்தே கெடும் பெரிய பாவியாகிய அடியேன் மலியும் பிழைகளால் பிழையே செய்து கெடுகின்றேன்; தூயதாகிய திருவருளை நீ நல்குவாயாயின் யானும் அத்தெரிவுடையார்போலச் சிவபோகம் பெற்று விளங்குவேன். எ.று.
துரிய நிலையில் வைத்து நோக்கும் யோகக்காட்சிக்குப் புலனாவது பற்றிச் சிவபரம்பொருளைத் “துரியப் பொருள்” என்று சொல்லுகின்றார். “துவக்கற விளங்கு துரியத்தினை யுணர்ந்தோர் தவத் தலைவரென்று மறைதான் அறையுமன்றே” (பெருந்திரட்டு) என்று பெரியோர் உரைப்பது காண்க. திருவாரூரை ஞானசம்பந்தர் முதலிய மூவரும் “அணியாரூர்” என்று சிறப்பித்தலின், வடலூர் வள்ளலும் “அணியாரூர்” என்று உரைக்கின்றார். நுண்ணறி வுடையோர், பொருள்களை நுண்ணிதின் ஆராய்ந்தறியும் இயல்பின ராதலால், “தெரியத் தெரியும் தெரிவுடையார்” எனவும், நுண்ணறிவின் பயன் சிவத்தைக் கண்டு இன்புறுவதாகலின், “சிவானுபவத்திற் சிறக்கின்றார்” எனவும் இசைக்கின்றார். உலகியல் தொடர்பு பிரிப்பினும், திருவருளிற் பிரியாத திண்மையும் கடைப்பிடியும் இல்லாமையாற் பிரிந்து பாவமே செய்பவன் என்பார், “பிரியப் பிரியும் பெரும் பாவி” என்றும், மீளவும் திருவருள் நெறியைப் பற்றாது உலகியற்குரிய பிழைகளையே செய்து பெருக்குவது தமது இயல்பாக வுளது என்பாராய், “பிழையிற் பிழைக்கின்றேன்” என்றும், உனது திருவருளை நீ நல்குவாயாயின் நான் அது காட்டும் நெறியிற் சென்று உய்தி பெற்று ஓங்குவேன் என்றற்கு, “நீ தூய அருள் புரியப் பெறுவேன் எனில் அவர்போற் சுகத்திற் பொலிவேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால் நினது தூய அருள் பெறுவேனாயின், யானும் சிவானுபவம்பெற்றுச் சிறப்புறுவேன் என்று தெரிவித்துக் கொண்டவாறாம். (4)
|