2464. பொலிவேன் கருணை புரிந்தாற்போல்
போதா னந்தக் கடல்ஆடி
மலிவேன் இன்ப மயமாவேன்
ஆரூர் மணிநீ வழங்காயேல்
மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி
மேவி எடுப்பார் இல்லாமல்
நலிவேன் அந்தோ அந்தோநின்
நல்ல கருணைக் கழகன்றே.
உரை: திருவாரூரில் எழுந்தருளும் மாணிக்க மணியாகிய சிவபெருமானே, திருவருள் புரிகுவாயாயின் யான் விளக்கமுற்று ஞானவின்பக் கடலில் மூழ்கி இன்ப மலிவெய்துவேன்; இன்ப மயமே யாவேன்; நீ அருள் நல்காயாயின் துன்பக் கடலில் வீழ்ந்து மனம் மெலிந்து வருந்துவேன்; என்பால் இரங்கித் துன்பத்தைத் துடைப்பார் இல்லாமையால், ஐயையோ, நான் மிகவும் நலிவுறுவேன்; அது நின்னுடைய நல்லருட்கு அழகு தராது, காண். எ.று.
திருவருள் எய்தினால் ஞானவொளி பெற்று நானும் விளக்க மெய்துவேன்; அதன் பயனாகச் சிவஞானப் பேரின்பக் கடலிற் படிந்து இன்புறுவேன்; இன்ப வடிவமாவேன் என மகிழ்ச்சி மீதூர்ந்து கூறுவாராய், “கருணை புரிந்தாயேல் பொலிவேன்; போதானந்தக் கடலாடி மலிவேன்” எனவும், “இன்ப மயமாவேன்” எனவும் இசைக்கின்றார். திருவருள் ஞானம் எய்தாவிடில், இம்மையில் துன்பத்தால் மெலிந்து மறுமையில் துன்பமே யுற்று, அதனினின்றும் காப்பாரின்றி வருந்துவேன் என்பார், “நீ வழங்காயேல் மெலிவேன்” எனவும், “துன்பக் கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் நலிவேன்” எனவும், அந்நிலைமை தமக்கு எய்தலாகாதென வேண்டலுற்று, “அந்தோ அந்தோ” எனவும், அருட்பெருங்கடல் எனப் பேசப்படும் நினது பெருமைக்கு அது நன்றாகாது என்பார், “நின் நல்ல கருணைக் கழகன்று” எனவும் கூறுகின்றார். மலிதல் - தளிர்த்தல். மேவுதல் - விரும்புதல்.
இதனால் அருள் பெறின் எய்தும் ஆக்கமும், பெறாவிடின் உறும் கேடும் கூறியவாறாம்.. (5)
|