2465. கருணைக் கடலே திருஆரூர்க்
கடவுட் சுடரே நின்னுடைய
அருணக் கமல மலரடிக்கே
அடிமை விழைந்தேன் அருளாயேல்
வருணக் கொலைமா பாதகனாம்
மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
தருணக் கருணை அளித்தபுகழ்
என்னாம் இந்நாள் சாற்றுகவே.
உரை: திருவாரூரில் எழுந்தருளும் கடவுளாகிய அருட் சுடரே, அருட் கடலே, நின்னுடைய சிவந்த தாமரை போன்ற திருவடிக்கே தொண்டனாதற்கு விரும்புகின்றேன்; அதற்குரிய திருவருளை நல்குக; நல்காயாயின் பிரமக்கொலை புரிந்த பெரிய பாதகனாகிய வேதியனுக்கும் அருள் கூர்ந்து அந்நாள் செவ்விய அருள் புரிந்த உனது புகழின் பான்மை என்னாவது? இப்போது எளியேனுக்கு உரைப்பாயாக. எ.று.
திருவாரூரில் கோயில் கொண்டருளும் சிவபெருமான் ஒரு பெருங்கடவுளென்பது உலகறிந்த செய்தியாகலின், “திருவாரூர்க் கடவுட் சுடரே” எனவும், அருளே யுருவாய வனாதலால் “கருணைக் கடலே” எனவும் பராவுகின்றார். சிவபிரான் திருவடிக்குத் தொண்டனாதலே பிறப்பறுத்தற்கு வாயிலாதல் பற்றி, “மலரடிக்கே அடிமை விழைந்தேன்” எனவும், அதற்கு அப்பெருமானது அருள் இன்றியமையாமையால் நல்குக எனவும் வேண்டுகின்றார். செந்தாமரை போல்வது திருவடி என்பதனால், “அருணக் கமல மலரடி” எனச் சிறப்பிக்கின்றார். அருணம் - சிவப்பு. “தொண்டலால் துணையுமில்லை” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் கூறுதலால், “அடிமை விழைந்தேன்” எனத் தெரிவிக்கின்றார். வருணம், ஈண்டு உயர் சாதியாகி வேதியரினத்துக் காயிற்று. மறையவன் செய்த மாபாதகம், “அன்னையைப் புணர்ந்து தாதை குரவனா மந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம்” (திருவிளை) எனப் பரஞ்சோதியார் கூறுவர். குற்றமுணர்ந்து வழிபட்டது கண்டு சொக்கநாதப் பெருமான் அருள் புரிந்தது இங்கே எடுத்தோதப்படுகிறது. காலமறிந்து செய்த கருணை, தருணக் கருணை எனப்படுகிறது. இப்போது எனக் கருளாவிடில் மறையோனுக்குக் கருணை செய்த்து பொய்யாம் என்பார், “என்னாம் இந்நாள் சாற்றுகவே” என வுரைக்கின்றார்.
இதனால், இந்நாள் எனக் கருளாயாயின், முன்னாளில் மதுரையில் மாபாதகம் புரிந்த மறையவற் கருளினை யென்பது பொய்யாத் எனத் தெரிவித்தவாறாம். (6)
|