2466.

     இந்நாள் அடியேன் பிழைத்தபிழை
          எண்னி இரங்காய் எணில் அந்தோ
     அந்நாள் அடிமை கொண்டனையே
          பிழையா தொன்றும் அறிந்திலையோ
     பொன்னார் கருணைக் கடல்இன்று
          புதிதோ பிறர்பால் போயிற்றோ
     என்நா யகனே திருஆரூர்
          எந்தாய் உள்ளம் இரங்கலையே.

உரை:

     என்னுடைய தலைவனே, திருவாரூரில் எழுந்தருளும் எந்தையாகிய பெருமானே, இக்காலத்தே அடியவனாகிய யான் செய்த குற்றங்களை யெண்ணி இரங்காயாயின், என்னை முன்பு அடிமை கொண்ட போது என்பாலுள்ள பிழைகளை நோக்கினா யில்லையே; அழகிய நினது அருள் வெள்ளம் புதிதோ? அல்லது பிறர்பாற் சென்று விட்டதோ? அருள் புரிக. எ.று.

     இந்நாள் பன்முறை இறைஞ்சி வழிபட்ட என்னை நோக்கி இரங்காமல் தாழ்க்கின்றாயே; இது முறையாகா தென்பார், “இந்நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணியிரங்கா யெனில் அந்தோ” என்கின்றார். முன்பு அடிமை கொண்டபோது பிழை சிறிதும் பார்க்காமல் அருள் புரிந்தாய் என்பார், “அந்நாள் அடிமை கொண்டனையே, பிழையா தொன்றும் அறிந்திலையோ” என வுரைக்கின்றார். நீயும் பழைய பெருமான், யானும் பழைய தொண்டன்; எனக்குச் செய்யும் திருவருள் புதிதன்றே என்பார், “பொன்னார் கருணைக் கடலின்று புதிதோ” என முறையிடுகின்றார். என்னைப் புறக்கணித்துவிட்டுப் புதியர்பால் நினது அருட்பெருக்கை மாற்றிக் கொண்டனையோ என்பாராய், “பிறர் பாற் போயிற்றோ” என வுரைக்கின்றார். நிலைமை என்னவாயினும், இரக்கமே வடிவினனாகிய நீ இரங்கா தொழிவது கூடாது என்பாராய், “எந்தையுள்ளம் இரங்கிலையே” என்று வருந்துகிறார்.

     இதனால், பிழை நோக்கி இரங்கா தொழிவது கூடாது என முறையிட்டவாறாம்.

     (7)