2473.

     கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக்
          கனியைஅருட் கடலை ஓங்கும்
     நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த
          நான்முகனார் நீண்ட நாவின்
     தலைபயின்ற மறைபயின்று மூவுலகும்
          காக்கின்ற தாயை வாகைச்
     சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி
          அம்மையைநாம் சிந்திப் போமே.

உரை:

     கலைவல்ல சான்றோர் உள்ளத்தில் இனிமை சுரந்தருளும் கரும்பு போல்பவளும், முக்கனியை நிகர்ப்பவளும், அருட் கடலாய் உயர்ந்து மெய்ம்மைக்கண் நிலைபெறும் முனிபுங்கவர்கள் தொழுது துதிக்க. பிரமதேவனுடைய நீண்ட நாவினால் நாளும் ஓதப்படும் மறை நூலை நன்கு பயின்று மூன்றாகிய உலகங்களைக் காக்கும் தாயாகியவளும், வெற்றி தரும் வில்லைப்போன்ற நுதலையுடையவளுமாகிய கலைவாணியம்மையை மனத்தின்கண் நினைந்து உய்தி பெறுவோமாக. எ.று.

     ஆழ்ந்தகன்ற கலைப் பயிற்சியால் பண்பட்ட சான்றோர் திருவுள்ளத்தை, “கலை பயின்றவுளம்” எனவும், அதன்கண் கலையின்பம் பெருகி மகிழ்வித்தலால், “இனிக்கும் கரும்பு” எனவும் இயம்புகின்றார். இனிமையுடைமையாற் கரும்பும் முக்கனியும் மொழிகின்றார். மா, பலா வாழையாகிய மூவகைக் கனியை, “முக்கனி” என்பர். மன மொழி மெய் ஆகிய மூன்றாலும் கற்றோர்க்கு இன்பம் தருதலால், கலைமகளை “முக்கனி” எனவுரைக்கின்றார். பேரருளாள ராதலால் முனிச் செல்வர்களை, “அருட் கடலையொக்கும் நிலை பயின்ற முனிவரர்” எனப் புகழ்கின்றார். கரை பிறழாக் கடல்போல அருள் நெறி பிறழாமை விளங்க, “அருட்கடலை யொக்கும் நிலை” எனக் குறிக்கின்றார். மறையோதும் நாவினனாதலால் நான்மறையை “நான்முகனார் நீண்ட நாவின் தலைபயின்ற மறை” என நவில்கின்றார். மூன்றாகிய உலகங்களில் வாழும் நல்லுயிர் அனைத்துக்கும் காப்பாய் அரண் செய்வது கல்வியாதலால், கலைமகளை, “மூவுலகும் காக்கின்ற தாய்” என மொழிகின்றார். வாகைச்சிலை - வெற்றி தரும் வில். கலைவாணி - கலைமகட்கு வழங்கும் பெயர்களில் ஒன்று.

     இதனால், மறையோதும் பிரமனைப் போன்றே கலைமகளும் மறை வல்லுநள் என்ற உண்மை தெரிவித்தவாறாம்.

     (3)