2479. துனியும் பிறவித் தொடுவழக்குஞ்
சோர்ந்து விடவுந் துரியவெளிக்
கினியும் பருக்குங் கிடையாத
இன்பம் அடைந்தே இருந்திடவும்
பனியுந் திமய மலைப்பச்சைப்
படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்
எங்கே அங்கே கண்டேனே.
உரை: வெறுப்புப் பொருந்திய பிறப்பின் தொடர் வரவு நீங்கிச் சோர்வு படவும், துரிய நிலைக்கு அப்பாலாய அதீத வெளியில் தேவர்கட்கும் கிடைக்காத பேரின்பத்தில் திளைக்கவும், பனி படர்ந்த இமயமலை மகளான பச்சைநிற உமாதேவி இடப்பாற் பொருந்திய பவளமலை போன்ற சிவபெருமானைப் பழமலைத் திருக்கோயிலிற் கண்டு இன்புற்றேன். எ.று.
துனி - வெறுப்பு. பல காலமாகப் பலவேறு வகையிற் பிறந்து வெறுத்தமை தோன்ற, “துனியும் பிறவித் தொடு வழக்கு” எனவும், மேலும் அதன்கட் சிக்கி வருந்தலாகாதென்ற கருத்துப் புலப்பட, “தொடு வழக்குச் சோர்ந்துவிடவும்” எனவும் கூறுகின்றார். தொடு வழக்கு - தொடர்ந்து வரும் வரவு. பிறவித் தொடர்பு பற்றுக்கோடின்றித் தானே கெட வேண்டும் என்பது கருத்து. உந்திக்கண் இருந்து நோக்கும் யோகக் காட்சி துரியம் என்றும், அதற்கப்பாலாய ஞானவெளி அதீதமென்றும் கூறப்படுவதால், அங்கே கண்டு பெறும் சிவப்பேரின்பத்தை, “உம்பருக்கும் கிடையாத இன்ப” மென்று இயம்புகின்றார். இமயம் என்பது பனிமலைக்குப் பெயராதலால் “பனியுந்து இமயமலை” என்றும், இமய வேந்தனுக்கு மகளாகிய உமையம்மையை, “இமயமலைப் பச்சை” யென்றும் உரைக்கின்றார். பச்சைநிறமேனியுடைமை பற்றி உமையைப் பச்சை என்று இசைக்கின்றார். உமை தழுவிய கூறு பொருந்திய செம்மேனிப் பெருமானாதலால் “பச்சை படர்ந்த பவளப் பருப்பதம்” என்று பராவுகின்றார். பருப்பதம் மலை. கனியும் சிலையும் கலந்த விடம் பழமலை. கனி - பழம். சிலை - மலை.
இதனால், பிறவி நீக்கம் எய்தவும், சிவப்பே றெய்தி இன்புறவும் பழமலையில் சிவபெருமானைக் கண்டமை தெரிவித்தவாறாம். (6)
|