2481.

     என்னார் உயிரிற் கலந்துகலந்
          தினிக்கும் கரும்பின் கட்டிதனைப்
     பொன்னார் வேணிக் கொழுங்கனியைப்
          புனிதர்உளத்தில் புகுங் களிப்பைக்
     கன்னார் உரித்துப் பணிகொண்ட
          கருணைப் பெருக்கைக் கலைத்தெளிவைப்
     பன்னா கப்பூண் அணிமலையைப்
          பழைய மலையிற் கண்டேனே.

உரை:

      என்னுடைய அரிய உயிரின்கட் கலந்து நின்று இன்புறுத்தும் கரும்பின் கட்டி போல்பவனும், பொன்னிறம் கொண்ட சடையையுடைய கொழுவிய கனி போன்றவனும், தூய சான்றோர் உள்ளத்திற் புகுந்து மகிழ்விப்பவனும், கல்லில் நார் உரிப்பதுபோலப் பணியாத தடிப்புற்ற என்னைப் பணிவித்துத் தொண்டு புரிவித்த அருட் பெருக்காயவனும் கலைகளால் உளதாகும் தெளிந்த ஞானமாகியவனும், விடம் தங்கிய பல்லையுடைய பாம்பைப் பூணாரமாக அணிந்தவனுமாகிய சிவபிரானை முதுகுன்றத் திருக்கோயிலிற் கண்டு மகிழ்ந்தேன். எ.று.

     பெறற்கருமைபற்றி “ஆருயிர்” எனவும், உயிரிற் கலந்து உணர்வாய் நின்று இன்பம் தருவது கொண்டு, “கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி” யெனவும் இயம்புகின்றார். கரும்பின் கட்டி - கருப்பஞ் சாற்றைக் காய்ச்சித் திரட்டிய கட்டி. பொன்னிறம் உடைமையால் சிவன் சடையை, “பொன்னார் வேணி” என்று கூறுகின்றார். வேணி - சடை. நன்கு பழுத்துச் சாறு நிறையக் கொண்ட பழம் என்றற்கு,“கொழுங்கனி” என்கின்றார். மனம் தூயராகிய பெரியோர் திருவுள்ளமே கோயிலாகக்கொள்வதனால் “புனிதர் உளத்திற் புகுங் களிப்பு” என்று உரைக்கின்றார். களிப்புத் தருவதைக் களிப்பு எனக் கூறுகின்றார். “நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே, புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்” என்ற அருளுரையை இக் கூற்று நினைப்பிப்பது காண்க. நாரில்லாத கல்லில் நார் உரிக்கும் செயலருமை புலப்படக் “கல்நார் உரித்து” என இயம்புகிறார். “கன்னார் உரித்த கனியே போற்றி” (போற்றி) என மணிவாசகர் பரவுவது நோக்குக. பணி புரிதற்கமையாத மனத்தடிப்புற்றிருந்த என்னைப் பணிவித்துத் தொண்டு செய்பவனாக்கினாய்; இதற்குக் காரணம் என்பாற் கொண்ட பெருங்கருணை என்பாராய், “பணி கொண்ட கருணைப் பெருக்கு” எனப் பகர்கின்றார். கலைஞானத் தெளிவு சிவபோகம் விளைவிப்பதுபற்றி, சிவனை, “கலைத் தெளிவு” என்கின்றார். விடம் தங்கிய பற்களையுடைமையின், விடப் பாம்பை, “பன்னாகம்” எனக் கூறுகின்றார். பழைய மலை -பழமலை.

     இதனால், மலப்பிணியால் தடிப்பேறிச் சிவத்தொண்டு புரியும் பான்மையின்றி யிருந்த தம்மைத் தொண்டனாக்கிய அரிய அருட்செயலை வியந்துரைத்தவாறு.

     (8)