2491. அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள்
அளித்தவர் களித்திடப் புரியும்
பொன்பொலி மேனிக் கருணையங் கடலே
பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத்
தொல்நக ரிடத்துன தெழில்கண்
டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும்
இவ்வரம் எனக்கிவண் அருளே.
உரை: மெய்யன்பர்களாயினார் தங்கள் மனத்துக்கு இன்பமானவை என எண்ணி விழைந்தவைகளை எண்ணியவாறே அளித்து அவர்களை மகிழ்விக்கத் திருவுள்ளம் கொள்ளும் பொன் போலும் மேனியை யுடைய கருணைக் கடலே, பொய் யொழுக்கமுடைய எனது பொய்ம்மை யியல்பைக் கண்டு இன்னமும் யான் துன்பமுற்று வருந்த விடாது, திருவண்ணாமலையாகிய பழமையான திருக்கோயிலின்கண் நின்னுடைய பேரெழிற் காட்சி பெற்று எலும்பும் மனமும் நீராய் உருக வாழ்த்தி வழிபட வேண்டுகிறேனாதலால், எளிய எனக்கு இந்த வரத்தைத் தந்தருள்க. எ.று.
“வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” (மறைக்காடு) எனச் சான்றோர் கூறுபவாயினும், வேண்டுவார் இப்பெற்றியர் என விளக்குதற்கு “அன்பர்” என்றும், அவர்கள் வேண்டுவது இது என விளங்குதற்கு “மனத்தே இன்புற்றவைகள்” என்றும், ஈதலின் கருத்தைப் புலப்படுத்தற்கு “ அளித்தவர் களித்திடப் புரிவது” என்றும் விரித்துரைக்கின்றார். இங்ஙனம் செய்ததற்குக் காரணம், பெருமான் அருட் பெருங் கடலாய் இருப்பது என்பார், “கருணையங் கடலே” எனவும் அக்கடற்கு உருநலம் கூறுபவர் போன்று, “பொன்பொலி மேனிக் கருணைக் கடலே” எனவும் புகல்கின்றார். மெய்யன்பர்க்குக் கருணைக் கடலாய் வேண்டுவதீயும் பெருமான், பொய் யொழுக்கமுடையார்க்கு அது செய்யான் என்று தோன்றுவதால், தமது பொய்ம்மை யொழுக்கத்தை எடுத்தோதித் தாம் விரும்புவது அருளாமல் விடுத்தல் கூடா தென்பாராய், “பொய்யனேன் பொய்ம்மை கண்டு இன்னும் துன்பமுற்றலையச் செய்திடேல்” என வுரைக்கின்றார். பொய்ய
னாதலால் பொய்ம்மைக் கேற்பத் துன்பமுற்று இதுகாறும் வருந்தினேன்; இனித் துன்புறாமை யாண்டருள் என்றற்கு “இன்னும் துன்பமுற்றலையச் செய்திடேல்” என வேண்டுகிறார். தாம் வேண்டுவது இது என உரைப்பாராய், “அருணைத் தொன்னகரிடத்து உனது எழில் கண்டு துதித்திடல் வேண்டும்” எனவும், துதிக்கு மிடத்தும் உடல் எலும்பெலாம் உருக உள்ளுறும் மனமுற்றும் உருக வேண்டும் என்பாராய், “என்புலாம் உருக்க துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கு இவண் அருள்” எனவும் இயம்புகிறார்..
இதனால், திருவண்ணாமலையில் பெருமானைக் கண்டு எலும்பும் மனமும் உருகத் துதிக்க வேண்டும் என விழைந்தவாறாம். (2)
|