2492.

     பூத்திடும் அவனும் காத்திடு பவனும்
          புள்விலங் குருக்கொடு நேடி
     ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும்
          இன்னமும் காண்கிலர் என்றும்
     கோத்திடும் அடியர் மாலையின் அளவில்
          குலவினை என்றுநல் லோர்கள்
     சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது
          சந்நிதி உறஎனக் கருளே.

உரை:

      உலகைப் படைக்கும் பிரமனும், காத்தளிக்கும் திருமாலும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருக்கொண்டு தேடி மெய்யன்பர் வணங்கி வழிபடும் நின்னுடைய திருமுடியையும், திருவம்பலத்தில் ஆடல் புரிகின்ற திருவடியையும் இன்னமும் கண்டிலர் எனவும், அடியராயினார் தொடுக்கும் சொன்மாலை பூமாலையளவில் இருந்தருள்கின்றாய் எனவும் நல்லன்புடைய சான்றோர் சொல்வது கேட்டு மகிழ்கின்ற யான் நினது திருமுன் போந்து கண்டு மகிழ அருள் செய்க. எ.று.

           பூத்தல்-படைத்தல். புள் - அன்னப்பறவை. விலங்கென்றது பன்றியை. பிரமன் முடியையும் திருமால் திருவடியையும் தேடிக் காணமாட்டாராயினர் என்ற வரலாறுபற்றி, “இன்னமும் காண்கிலர்” என்று கூறுகின்றார். திருமுறையாசிரியர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை ஓதுவதொழியாமையின் “நல்லோர்” என அவர்மேல் வைத்துக் கூறுகின்றார். “கோத்திடும் மாலை” என்று பொதுப்படவுரைத்தலால், சொன்மாலையும் பூமாலையும் மணிமாலையும் பிறவும் கொள்ளப்படும் என்க. குலவுதல் - விரும்புதல். “பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர்” (திருநா. ஆப்பாடி) என்றும், “பாடுவார்க் கருளும் எந்தை” (திருஞான. முதுகுன்றம்) என்று கூறுவது கொண்டு “நல்லோர்கள் சாற்றும் அது கேட்டு” எனவுரைக்கின்றார். நானும் அதுபோற் சொன்மாலை தொடுத்து உய்தி பெறலாம் என நினைந்து ஊக்கமுற்றேன் என்பாராய், “அது கேட்டு உவந்தனன் என ஓதுகின்றார். அடியேனும் சன்னிதி எய்தப் பெற்றால் பாமாலை பாடி இன்புறுவேன் என்ற கருத்து விளங்க “நின்து சன்னிதியுற எனக்கருளே” என்று விண்ணப்பிக்கின்றார்.

     இதனால் திருவண்ணாமலையில் பெண்ணாகிய பெருமான் திருமுன்பு அடைந்து பாடி மகிழ்வேன் எனத் தெரிவித்தவாறாம்.

     (3)