2493. அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே
அற்புத அமலநித் தியமே
தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச்
செல்வமே அருணையந் தேவே
இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும்
என்பிழை பொறுத்துநின் கோயில்
பொருள்பழுத் தோங்கும் சந்நிதி முன்னர்ப்
போந்துனைப் போற்றுமாறருளே.
உரை: அருளாகிய கனி நிறைந்துயர்ந்த ஆனந்தமாகிய மரமாகியவனே; அற்புதமான தூய நித்தப் பொருளே; ஞானத் தெளிவு பெற்றுயர்ந்த சிந்தையாளர்க்கு உரிமையான திருவருட் செல்வமே; திருவண்ணாமலையில் எழுந்தருளும் தேவ தேவனே, அறியாமையாகிய இருள் நிறைந்த மனமுடையவனாயினும், என் குற்றங்களைப் பொறுத்தருளி நின் திருக்கோயில் பொருள் மிக்கு விளங்கும் திருமுன்பு அடைந்து உன்னைப் போற்றித் துதிக்குமாறு எனக்கு அருள் புரிக. எ.று.
அருளே திருவுருவாய்த் தன்னை யடைந்தார்க்கு இன்ப நீழல் தருவது பற்றி, “அருள் பழுத்தோங்கும் ஆனந்தத் தருவே” எனக் கூறுகின்றார். “சத்தாகியும் மலத்தோடு கூடிய உயிர் போலாது சத்தாய் மனமில்லதாய் நித்தமாகிய பரம்பொருளாதலின், “அற்புத அமல நித்தியமே” எனப் புகல்கின்றார். தெருள் - ஞான நிறைவால் உளதாகும் தெளிவு. சித்தர் - சிவ சிந்தனையாளர். நலமே புரியும் செல்வம் என்றற்கு “உரிமைச் செல்வம்” என வுரைக்கின்றார். அறிதோறும் அறியாமையே காண நிற்றலின், “இருள் ப.ழுத்தோங்கும் நெஞ்சினேன்” எனத் தம்மைக் குறித்துரைக்கின்றார். இருள் காரணமாகக் குற்றம் புரிதலால், “என் பிழை பொறுத்து” எனவும், திருமுன்பு நிலவும் அருள் ஒளியால் இருள் தருதுன்பம் நீங்குதலின், அதனைப் “பொருள் பழுத்தோங்கும் சன்னிதி” எனப் புகழ்கின்றார்.
இதனால், திருவண்ணாமலையிற் பெருமான் சன்னிதி ஞானப்பொருள் நிலவுவதெனத் தெரிவித்தவாறாம். (4)
|