2495.

     தேடுவார் தேடும் செல்வமே சிவமே
          திருஅரு ணாபுரித் தேவே
     ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே
          எந்தையே எம்பெரு மானே
     பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே
          பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
     நாடுவார் புகழும் நின்திருக் கோயில்
          நண்ணுமா எனக்கிவண் அருளே.

உரை:

      சிறந்த செல்வமெனத் தேடும் ஞானச் செல்வர்களின் அருட் செல்வமே, சிவமே, திருவண்ணாமலையில் கோயில் கொண்டருளும் தேவதேவனே, நீண்ட இதழ்களையுடைய கொன்றை மலரைக் கண்ணியாகச் சூடிய எங்கள் தலைவனை, எந்தையே, எங்கள் பெருமானே, பாடிப் பரவும் தொண்டர்கட்கு அருள் புரியும் பரம்பரப் பொருளாயவனே, பாவியாகிய என்னுடைய பொய் வழுவுமாகிய குற்றங்களைப் பொறுத்தருளி நாடி யடைபவர் பரவியேத்தும் புகழையுடைய நினது திருக்கோயிலையடையுமாறு திருவருள் புரிக. எ.று.

     செல்வ வகை பலவும் தேடிப் பெறும் சிறப்புடையவையாதலால், “தேடுவார் தேடும் செல்வமே” எனப் புகல்கின்றார். அருணாபுரி -திருவண்ணாமலை. ஏடு - மலரின் இதழ். சிவபெருமானுக்கு மாலையும் கண்ணியும் கொன்றையாதல்பற்றி, “இதழிக் கண்ணியங் கோவே” எனக் கூறுகின்றார். பாடுவார்க்கருளும் எந்தை” (முதுகுன்றம்) என்று சான்றோர் புகழ்தலால், “பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே” என வுரைக்கின்றார். பரம்பரம் - மிகவும் மேலானது. பொய் முதலாகிய குற்றங்களைப் “பொய் யெலாம்” எனத் தொகுத்துச் சொல்லுகின்றார். நாடியடைபவர் இன்பமிகுதியால் புகழ்வது விளங்க, “நாடுவார் புகழும் திருக்கோயில்” எனச் சிறப்பிக்கின்றார். நண்ணுமாறு என்பது ஈறு குறைந்தது. “விளம்புமா விளம்பே” (திருவிசைப்பா) எனப் பெரியோர் வழங்குவது காண்க..

இதனால் பரம்பரனாகிய சிவபெருமான் தன்னைப் பரவிப்பாடும் தொண்டர்க்கு அருள் புரிபவன் என்பது தெரிவித்தவாறாம்.

     (6)