2498. கருணைஅங் கடலே கண்கள்மூன் றுடைய
கடவுளே கமலன்மால் அறியா
அருணைஎங் கோவே பரசிவா னந்த
அமுதமே அற்புத நிலையே
இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட
இன்பமே அன்பர்தம் அன்பே
பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன்
போந்துனைப் போற்றும்வாறருளே.
உரை: அருட் கடலாய்க் கண்கள் மூன்றுடையதாகிய கடவுளே, பிரமனும் திருமாலும் அறியமாட்டாத திருவண்ணாமலையையுடைய எம்முடைய அரசே, பரசிவமாகிய இன்ப அமுதமே, அற்புத நிலையமே, துன்பச் சூழலாகிய பிறவியிற் புகுந்து உழலாவண்ணம் என்னை ஆண்டருளிய இன்ப வடிவினனே, அன்பர்க்கு அன்புருவே, நன்பொருளாகிய சிவ ஞானப் பேற்றுக்காக எளியேன் வந்து வணங்கி நின்னைப் போற்றுதற்கு அருள் செய்க. எ.று.
கருணை, அருள், கமலன், தாமரையில் இருக்கும் பிரமன். அருணை எம்கோ, திருவண்ணாமலையில் எழுந்தருளும் அருளரசு; எமக்குத் தலைவன் எனினுமாம். பரசிவம் இன்ப வடிவமாதல் பற்றி, “பரசிவ ஆனந்த அமுதமே” எனப் பகர்கின்றார். மாயா மண்டலத்துக்கு அப்பால் விளங்கும் சிவம், பரசிவம் எனப்படும். சிவம் - இன்ப மயம். எல்லா வகையான அற்புதங்கட்கும் முதலிடம், அற்புத நிலையம். இருள் நிலம் - துன்ப வுலகம். “இருள் சேர்ந்த இன்னா வுலகம்” (குறள்) எனத் திருவள்ளுவர் தெரிவிப்பது காண்க. சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்டோர் துன்ப வுலகிற் சூழலிற் புகுந்து பிறந் திறந்து வருந்தா ரென்பது பற்றி, “இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே” என்று இசைக்கின்றார். அன்பும் சிவமும் ஒன்றென்பவாகலின் “அன்பர்தம் அன்பே” என்கின்றார். எய்தப்படும் பொருள்களில் நலமாவது ஞானப் பொருள். “ஊனத்திருள் நீங்கிட வேண்டின் ஞானப் பொருள் கொண்டடி பேணும்” என ஞானசம்பந்தர் நவில்வது காண்க.
இதனால் திருவண்ணாமலையில் சிவனைக் கண்டு வணங்குவது சிவஞானப் பேற்றுக்கு ஏதுவாம் எனத் தெரிவித்தவாறாம்.
(9)
|