2510.

     பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர்
          படுந்துயரப் புன்மை நீக்கும்
     வல்லானே எனதுபிணி நீ நினைந்தால்
          ஒருகணத்தில் மாறி டாதோ
     கல்லாதேன் எனினும்எனை இகழாதே
          நினதடியார் கழகங் கூட்டாய்
     செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி
          தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      பொல்லாதவர்களாகிய சூரவன்மாவின் கூட்டத்தை யழித்துத் தேவர்கள் பட்ட துன்பத்தால் உண்டாகிய குறையைத் தீர்த்தருளிய வல்லமையுடைய முருகப் பெருமானே, நீ திருவுளம் கொண்டால் எமக்குற்ற நோய் ஒரு கணப்பொழுதில் நீங்கிவிடுமன்றோ; திருவருளறிவு பெறாதவனாயினும் என்னையிகழ்ந்து ஒதுக்காமல் நின்னுடைய அடியார் கூட்டத்தில் சேர்த்தருள்க; பகைவரது வலிமையை ஒடுக்கும் சிங்கபுரியில் எழுந்தருளும் தெய்வக்குன்றமே, எ.று.

           தீமையை செய்தமைபற்றிச் சூரவன்மாவையும் அவன் கூட்டத்தையும் “பொல்லாத சூர்க்கிளை” எனக் கூறுகின்றார். தடிதல் - குறைத்தல்' ஈண்டு அழித்தல் மேற்று, “சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்”; (முருகு) என்று பெரியோர் உரைப்பர். துன்பத்தால் உளதாகும் மனக்குறை புன்மை விளைவித்தலின், “படுந்துயரப் புன்மை” என்கின்றார். வல்லான் -வல்லமையுடையவன். மாறுதல் - கெடுதல். மனத்தைப் பிணித்துத் தன்னையே நினைக்கச் செய்தலால், நோய் “பிணி” எனப்படுகிறது. கல்லாமை - திருவருள் ஞானமில்லாமை. கழகம் - கூட்டம். கூட்டுதல் - சேர்த்தல். செல்லாதார் - மாறுபட்ட பகைவர். மெய் வலியும் மனவலியும் பிற வலிகளும் அடங்க, வலியெனப் பொதுவாகப் புகல்கின்றார்.

     இதனால், முருகப்பெருமான் திருவுளம் கொண்டால் பிணியெல்லாம் கணப்பொழுதில் தீர்ந்துவிடும் எனத் தெரிவித்தவாறாம்.

     (4)