2512.

     தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர்
          கரமளித்த சதுரன் அன்றே
     மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன்
          முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
     தேவாதி தேவன்எனப் பலராலும்
          துதிபுரிந்து சிறப்பின் மிக்க
     தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி
          தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      சிங்கபுரியிற் கோயில் கொண்டருளும் தெய்வக் குன்றமே, பண்பு கெடாத வணிகர் குலப் பெண்ணொருத்திக்கு வெட்டுண்ட கையை யளித்தருளிய வித்தகன் என்று முதிர்ந்தொழியாத மறைநூல்கள் சொல்லுகின்ற மொழியைக் கேட்டறிந்து உனது தாமரை போலும் திருவடியை முறைப்படி வணங்கித் தேவாதி தேவன் என்று பலரும் துதித்துப் பரவும் சிறப்பால் மேன்மையுற்ற பெருமானே, நெருப்புப் போற் கனலுகின்ற இந்த நோயைத் தீர்த்தருளுக. எ.று.

          நற்குண நற்பண்புகளாற் கெடுதல் இல்லாத வணிகரினத்துப் பெண் என்றற்குத் “தாவாத வணிகர் குலப் பெண்” என்று கூறுகின்றார். வணிகர் குலப் பெண்ணொருத்தி இளமையிலிருந்தே முருகன்பால் பேரன்பு கொண்டு முருகா என்ற திருப்பெயரை ஓதி வாரா நிற்ப மணமான பின் அவள் கணவன் அப்பெயரைக் கூறலாகாது மறுத்தும் ஒரு நாள் அவள் தன்னை மறந்து முருகா வெனக் கைகூப்பி மொழியக் கண்டு கூப்பிய கையை வெட்டி விட்டானாக, அது கண்டும் அவள் முருகப் பெயரைச் சொல்லி அரற்றினாள்; முருகன் திருவருளால் வெட்டுண்ட கை பழைய படியே உருவாயிற் றென்பது வரலாறாதலால், அதனை “வசியப் பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன்” என்றும், அவ்வரலாறு முருகன் புகழ் கூறும் நூல்களில் பண்டிருந்தே வழங்கி வருவது தோன்ற, “மூவாத மறை புகலும் மொழி” யென்றும் மொழிகின்றார். சதுரன், வித்தகன்; சதுரப் பாடுடையவன் என்றலும் உண்டு. மறைநூல், பழமையான நூல்கள்; நிலை பெற்று வழங்கி வருவது விளங்க “மூவாத மறை” என்கின்றார். முண்டகம், தாமரை. வணங்குதற்குரிய முறை பிறழாமல் வணங்குமாறு புலப்பட, “முறையில் தாழ்ந்து” என்று கூறுகின்றார். தாழ்ந்து துதி புரிந்து என இயையும். தேவாதி தேவன், தேவர்கட்குத் தலையாய தேவன்; தேவ தேவன் என்பதாம். துதி புரிந்து பரவும் என ஒரு சொற் பெய்து கொள்க. சிறப்பால் மிக்க பெருமானே என உரை கூறினும், “சிறப்பின் மிக்க சிங்கபுரி” என இயைத்துக் கொள்க. நெருப்புப் போல் வெதுப்பி வருத்துகின்ற நோய் என்றற்குத் “தீவாயிப் பிணி” எனக் குறிக்கின்றார். “ஒரு முருகா வென்றுள்ளங் குளிர வுவந்துடனே, வருமுருகா வென வாய்வெருவா நிற்பக் கை யிங்ஙனே, தருமுருகா வென்றுதான் புலம்பா நிற்கும் தையல் முன்னே, திருமுருகாற்றுப் படையுடனே வரும் சேவகனே” என வரும் தனிப் பாட்டும் வணிகப் பெண்ணின் வரலாற்றை வற்புறுத்துகிறது.

     இதனால், வணிகப் பெண்ணுக்குக் கரமளித் தருளிக் குறை நீக்கியது போல எனக்குற்ற தீப்பிணியைப் போக்கி யருளுக என விண்ணப்பித்தவாறாம்.

     (6)