2513. வானவர்கோன் மேனாளில் தரமறியா
திகழ்ந்துவிட விரைவில் சென்று
மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த
கொடுமைதனை மாற்றும் எங்கள்
தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே
இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
உரை: மணம் கமழு தேனைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த சிங்கபுரியில் கோயில் கொண்டருளும் தெய்வக் குன்றமே, “தேவர்கட் கரசனாகிய இந்திரன் முருகப் பெருமான் மிக்க சிறுவனாய் விளையாடுவது கண்டு உண்மைத் திறத்தை யுணராமல் இகழ்ந்து படை கலை விடுத்துப் போர் தொடுக்கவே, முருகன் விரைந்து விமானத்தில் இனிது இருந்து கொண்டே அவ்விந்திரன் செய்த போர் வகைகளை யழித்து வெல்லும், அசுரர் கூட்டத்தை வேரோடழித்த எங்கள் சண்முகப் பெருமானே, எனக்குற்ற இந்நோயைப் போக்கி யருள்வாய். எ.று.
வானவர் - வானுலகத்துத் தேவர்கள். கோன், ஈசன்; இங்கே இந்திரன் மேற்று. முருகப் பெருமானது மெய்ம்மை வன்மையை யுணராமல் சிறுவன் என்று இகழ்ந்து போர் தொடுத்தமையின், தரமறியாது இகழ்ந்துவிட” எனக் கூறுகின்றார். “நொய்தாம் குழவியெனக் கொள்கிலம் நோன்மை நாடின், வெய்தாம் அவுணக் குழு வோரினும் வெய்யன் யாரும், எய்தாத மாயம் உளனால் இவன் தன்னை வெம்போர், செய்தாடல் கொள்வம் இவண் என்று தேர்ந்து சூழ்ந்தார்” (திருவிளையாட்டு) எனக் கந்தபுராணம் உரைப்பது காண்க. மானம், விமானம். வணங்கி வாழ்த்துவ நேர்மையாக அதனை விடுத்து இந்திரன் போர் தொடுத்தது கொடுமையாதலால், “அவன் புரிந்த கொடுமை” என வள்ளலார் கூறுகின்றார். போர் வகை யத்தனையும் கெடுத்தமையால், “கொடுமைதனை மாற்றும் எங்கள் சண்முகனே” என்று புகழ்கின்றார். சண்முகன் - ஆறு முகங்களை யுடையவன். தீயாய் வெதுப்புவது பற்றி “இப்பிணியைத் தணிப்பாய்” என்று சாற்றுகின்றார். நறுமணம் கமழும் மலர்கள் சொரியும் தேனை, “வாசத் தேன்” எனச் சிறப்பிக்கின்றார்.
இதனால் பிள்ளைப் பருவத்தேயே இந்திரனை வென்ற பெருமையைக் கூறி நோய் நீங்க வேண்டியவாறாம். (7)
|