எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2520.

     உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி
          ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
     இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ
          டிரண்டென ஓங்குதிண் தோளும்
     திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச்
          சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
     விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி
          விநாயக விக்கினேச் சுரனே.

உரை:

      சித்திகள் பலவும் நல்கி உலகுயிர்கள் யாவும் வளம் பெறற் பொருட்டு அருளாகிய மத நீரை யருவி போலச் சொரியும் யானை முகமும், ஐந்து கைகளும் விளங்குகின்ற சிவந்த திருமேனியின் தோற்றமும் நான்காய் ஓங்கும் திரண்ட தோள்களும் திலகமிட்டு ஒளி திகழும் நெற்றியை யுடைய மகளிரான சித்தியும் புத்தியுமாகிய இருவரை இரு பக்கத்தும் இருத்தி யணைத்து விளங்கும் நின் திருவடி நீழலை நீங்காமல் இருக்க விரும்புகிறேன்; எய்தும் இடையூறுகளை விலக்கி யருளும் விநாயகப் பெருமானே. எ.று.

          பலவாகிய உலகங்களில் எண்ணிறந்த உயிர்கள் வாழ்தலால் அவைகள் ஆங்காங்கு இனிது வாழ அருளும் முதல்வனாதல் தோன்ற, “உலகெலாம் தழைப்ப அருள் மாமுகம்” என்று சிறப்பிக்கின்றார். மா யானை. யானைக்கு இரு கன்னங்களிலும் மத மொழுகுதல் இயல்பாகலின், யானை முகக் கடவுளிடத்து அருள் மத நீராக ஒழுகுகிற தென்பார், “மத வருவி ஒழுகு மாமுகம்” என்று கூறுகின்றார். சிவநாத திருமேனியின்கண் அருளொளி விளங்குதல் பற்றி, “இலகு செம்மேனிக் காட்சி” எனப் புகல்கின்றார். தோள்களுக்கு உயர்வும் திண்மையும் அழகு தருதலால் “ஓங்கு திண்தோள்” என்கின்றார். திலகம் - மகளிர் நெற்றியில் இடும் மங்கலக் குறிப்பு. சித்தி புத்தி யென்ற மகளிர் இருவரும் கயமுகாசுரன் புதல்விகளாவர் என விநாயக புராணம் கூறுகிறது. இடம் வலமாகிய இரு மருங்கிலும் இரு மகளிரும் இருப்ப, இரு கைகளாலும் அவரை அன்பு மிகுதி தோன்ற அணைத்திருக்கும் அருட்காட்சி திருவடிகளைப் பரவும் அன்பர்க்கு இன்பம் மிகுவித்தலால், “விலகுறா தெளியேன் விழைந்தனன்” எனத் தெரிவிக்கின்றார். அருளுக என்பது குறிப்பெச்சம். சித்தி விநாயகன் -சித்திகள் பலவும் நல்கியருளும் சிறந்த தலைவன்; விக்கினேச்சுரன் - விக்கினங்களைப் போக்கும் முதல்வன். விக்கினம் -இடையூறு.

          இதனால் விநாயகரது திருவுருவ நலம் புகழ்ந்து அக்காட்சியின்பத்தை நீங்காது இருந்துபெற அருளுக என வேண்டியவாறாம்.

     (3)