2521.

     உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும்
          உறுபொருள் யாவும்நின் தனக்கே
     கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக்
          கழல்இணை நினைந்துநின் கருணை
     வெள்ளம்உண் டிரவு பகல்அறி யாத
          வீட்டினில் இருந்துநின் னோடும்
     விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி
          விநாயக விக்கினேச் சுரனே.

உரை:

      சித்தி விநாயக விக்கினேச்சுரனே, என்னுடைய உடம்பும் உயிரும் உள்ளமும் உணர்ச்சியும் என்பால் உள்ள பொருள்கள் யாவும் உனக்கே யுரியவாக்கிக் கள்ளமும் குற்றமும் பொருந்திய நினைவுகளைக் கொள்ளாமல், நன்னிலையைத் தந்து, உன்னுடைய திருவடியிரண்டையும் நினைந்து நினது திருவருளாகிய இன்ப வெள்ளத்திற் படிந்து நுகர்ந்து இரவு பகல் இல்லாத வீட்டுலகின்கண் நின்னினின்றும் நீங்குதலற்ற கலப்பெய்தி இன்புறுவேனோ. எ.று.

      உடல், உயிர், பொருள் மூன்றையும் சேர வுரைத்தல் இயல்பாயினும், உயிர்க்குரிய உள்ளமும் உணர்ச்சியும் விரித்துரைக்கின்றார். உணர்ச்சியைத் தூண்டிச் செயற்படுத்துவதும், உணர்ந்தவற்றைத் தெளிவதும் உள்ளமாதலின், உள்ளமும் உணர்ச்சியும் எனக் கூறுகின்றார். முன்னோர்வழி எய்தியனவும் தாந்தாம் ஈட்டியனவும் அடங்க “உறுபொருள்” என்கின்றார். கள்ளம் - கரவுடைச் செயல். கரிசு - குற்றம். நினைக்கும் கருவியாகிய உள்ளம் நேர்பட நினைத்தற்கும் திருவருள் துணை வேண்டுதலின், “கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி” என வுரைக்கின்றார். திருவடிக்கண் ஒன்றிய நினைவு திருவருளை எய்துவித்தலால், “கழலிணை நினைந்து நின் கருணை வெள்ளம் உண்டு” எனவும், திருவருளின்ப நுகர்ச்சி வீட்டின்பத்தின் வேறண்மை தோன்ற, “கருணை வெள்ளம் உண்டு இரவு பகல் அறியாத வீட்டினில் இருந்து” எனவும், வீடு பேறெய்தினோர் அத் துவிதக் கலப்புற்று மீளப் பிறந்திறந்துழலும் பிறவிச் சூழற்கு வாரா ரென்பது பற்றி, “நின்னோடும் விள்ளலில்லாமல் கலப்பனோ” எனவும் விளம்புகின்றார். விள்ளல் - நீங்குதல். விள்ளாக் கலப்பு - அத்துவிதக் கலப்பு.

      இதனால், திருவடியே நினைந்து அத்துவிதக் கலப்பு எய்துவது விரும்பியவாறாம்.

     (4)