2522. நாதமும்கடந்து நிறைந்துநின் மயமே
நான்என அறிந்துநான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப்
பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர்
இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: குற்றத்தையும் சமயப் போரையும் கைவிட்டுச் சிறந்த நன்மக்கள் மனத்திலும் ஏழையாகிய என் தலையிலும் வேதத்தின் கண்ணும் எழுந்தருளும் திருவடியையுடைய சித்தி விநாயகனே, விக்கினேச்சுரப் பெருமானே, சிவ தத்துவத்தைக் கடந்து அதற்கப்பாலதாகிய தத்துவாதீதப் பெருவெளியில் நிறைந்து விளங்கும் நின்மய சிவஞான வண்ணமே என் வண்ணமென வுணர்ந்து நான் வேறு சிவம் வேறாம் என்னும் வேற்றுமை யெல்லையின் நீங்கிய மௌன நிலையை பேதையாகிய யான் பெற்று மகிழ்வது எக்காலமோ, உணர்த்தி யருள்க. எ.று.
நாதம் - சுத்த மாயையின் உச்சியின் கண்ணதாகிய சிவ தத்துவம். நில முதல் சிவ மீறாகிய தத்துவ முப்பத்தாறும் மாயா காரியமாதலால் அம்மாயா மண்டிலத்துக்கப்பால் உள்ள தத்துவாதீதப் பரவெளியில் குறைவற நிறைந்து விளங்கும் பரசிவத்தை, “நாதமும் கடந்து நிறைந்த நின்மயம்” என்று குறிக்கின்றார். நின்மல ஞான சிவாகாரம் நின்மயம் எனப்படுகிறது. மக்களின் நீங்கிய சுத்தான்மா சிவானந்த ஞான வடிவுற்றுச் சிவமாம் தன்மை பெறுதலால், “நின்மயமே நான் என அறிந்து” என்றும், அந்த ஞானவின்பநிலை எய்தும் ஆன்மா சிவமயமாதலால், “நான் தானாம் பேதமும் கடந்த மௌன ராச்சியம்” என்றும் இயம்புகின்றார். சுத்தாவத்தையில் பசுத்தன்மையின் நீங்கிப் பதி கரணங்களாகப் பெறுதலால், மாயா காரிய வுலகியல் நினைவும் பேச்சும் செயலும் அகன்றொழிந்து அதீதத்தை யடைந்திருக்கும் நிலைமையை “மௌன ராச்சியம்” எனக் குறித்து அதனைப் “பேதையேன் பிடிப்பது எந்நாளோ” என ஏங்குகின்றார். மௌனராச்சியப் பேற்றுக்குச் சிவஞானம் இன்றியமையாமையின், “பேதையேன்” எனத் தம்மை வடலூர் வள்ளல் உரைக்கின்றார். ஏதம் - காமம் குரோதம் முதலாகவுள்ள குற்றங்கள். சமயவாதம் செருக்கும் சினமும் பயந்து சிறுமை விளைவித்தலால், சமயவுண்மை ஒருமைகளையுணர்ந்த சான்றோர், “ஏதமும் சமயவாதமும் விடுத்தோர்” எனப் புகழ்கின்றார். “ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள் ஒன்றோடொன்றொவ்வாமல் உள பலவும், அவற்றுள், யாது சமயம் பொருள் நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்க தின்றி, நீதியினால் இவை யாவும் ஓரிடத்தே காண நின்றது யாதொரு சமயம் அது சமயம்” எனச் சிவஞான சித்தியார் தெரிவிப்பது காண்க. சமய வாதம் விடுத்தோர் திருவுள்ளம் சமரச சன்மார்க்க நினைவுற்று பரம்பொருள் ஒருமையுணர்வால் விளங்குதல் பற்றி, “சமயவாதம் விடுத்தோர் இதயம்” சித்தி விநாயகர்க்கு இடமாதலை எடுத்துரைக்கின்றார். திருவடி ஞான முடைமையின், “ஏழையேன் சிரம்” எனவும், ஞான நூலாதல் பற்றி “வேதமும் தாங்கும் பாதனே” எனவும் இசைக்கின்றார்.
இதனால், தத்துவாதீத சிவானந்த ஞான நிறைவாகிய மௌன நிலையை விளக்கி அதனைப் பெறற்கருளுக என வேண்டியவாறாம். (5)
|