2523. சச்சிதா னந்த வடிவம்நம் வடிவம்
தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப்
போக்கியாங் கவ்வடி வாகி
அச்சிதா கார போதமும் அதன்மேல்
ஆனந்த போதமும் விடுத்தல்
மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: சித்தி விநாயக விக்கினேச்சுரப் பெருமானே, நமது வடிவம் சச்சிதானந்தமான அகள வடிவம்; ஏனைய அருவுருவும் உருவுமாகிய இரண்டும் அதிட்டானமாகும்; மேலும் பொய்யறிவானாலான ஆபாசக்
கற்பனை வடிவங்களுமாகும்; இவற்றை விலக்கி, அந்த அகள வடிவாய் அந்த அறிவுருவ ஞானமும் அதற்கு மேற்பட்ட இன்ப ஞானமும் விடுத்தலே மெய்ம்மை யுணர்வாம் வீடு பேறு என அறிவுருத்தருளினை; இதனை என்றும் மறவேன். எ.று.
அருவம் - அருவுருவம், உருவம் என்று மூவகைப்படும் திருமேனிகளில் அருவமென ஞானநூல் கூறும் திருமேனி. Êசத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய சச்சிதானந்தம்; அருவத்தை யாரும் அறிவறிதாகிய அகளத் திருமேனியென ஆன்றோர் கூறுவர். ஏனை அருவுருவத் திருமேனி, உருவத் திருமேனி யிரண்டும் பரமனால் அதிட்டிக்கப்படுவனவாதலால் “தரும் அதிட்டானம் மற்றிரண்டும்” என்று இசைக்கின்றார். இவ்வுருவிரண்டும் பொய்யான மக்களறிவால் ஆபாசமாகக் கற்பனையாற் படைக்கப்படுவனவாதலின் அவை பொருளல்லாதவையென விலக்கற்குரியன என்றற்கு “இரண்டும் பொய்ச் சிதாபாசக் கற்பனை இவற்றைப் போக்கி” எனக் கூறுகின்றார். பொய்ச்சித் ஆபாசக் கற்பனை - பொய்யறிவு கொண்டு செய்யும் ஞானிகளால் விரும்பப்படாத விபரீதப் படைப்பு. அங்கு - அகளநிலை. அவ்வடிவு - அருவமான சச்சிதானந்த வடிவம். சிதாகரம் - ஞானவடிவம். இதனைத் திருஞானசம்பந்தர், “ஞானத்திரளாய் நின்ற பெருமான்” என்பர். ஞானமே பரம்பொருள் வடிவமென வுணர்வது உண்மை ஞானமெனற்கு “அச்சிதாகார போதம்” எனவும், அதனால் பெறப்படும் ஞானவின்பத்தை “அதன்மேல் ஆனந்த போதம்” எனவும், இவ்வுணர்வும் இன்ப நுகர்ச்சியும் பசுஞான வெல்லைக்குள் நிற்றலின், இவற்றை விடுத்துப் பதிஞானமான மெய்ஞ்ஞான வின்பத்துள் திளைத்தல் வீடு பேறு என்றற்கு “மெய்ச் சிதாம் வீடு” எனவும் உரைக்கின்றார்.
இதனால், அபர ஞானக்காட்சியும் ஆனந்தமும் விடுத்து பரஞான போகப் பேறு வீடு பேறு என விநாயகப் பெருமான் அறிவுறுத்தவாறாம். (5)
|