2524. ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ
டுரு அல அருஅல உவட்ட
நன்றல நன்றல் லாதல விந்து
நாதமும் அலஇவை அனைத்தும்
பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட
பூரண மாம்சிவம் ஒன்றே
வென்றல்என் றறிநீ என்றனை சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: சித்தி விநாயக விக்கினேச்சுரனே, ஓருருவல்ல; இரண்டுருவல்ல; இரண்டுருவாகிய ஓருருவல்ல; உருவில்லாத அருவமுமல்ல; தெவிட்டி உவட்டத்தக்க நல்லதுமல்ல; இவை யாவும் நிலையின்றி மாய்தல் உடையவை என்று அறிந்து அகத்தும் புறத்தும் அகண்ட பூரணமாகிய சிவம் ஒன்றே யாம் எனப்படுவது என்று நீ அறிவுறுத்தினை; யானை அதனை மறவேன். எ.று.
பரம்பொருள் உருவுடைய ஒன்றன்று, உருவு மருவுமாகிய இரண்டாக அமைவதுமன்று என்பாராய், “ஒன்றல விரண்டும் அல” என்றும் ஆணும் பெண்ணும் என இரண்டாய் ஓருருவுடையதுமன்று என்றும் உரைக்கின்றார். “ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருணல்கிச் சேணின்றவர்க்கின்னும் சிந்தை செய வல்லான்' என ஞானசம்பந்தர் உரைப்பது கொண்டு “உரு இரண்டென்று கொள்ளற்க என்பது புலப்பட, “இரண்டு மல” எனவும், மாதொரு பாகனாதல்பற்றி இரண்டொன்றிய உருவெனக் கொள்ளற்க என்பது விளங்க, “இரண்டொன்றோடுருவல” எனவும் கூறுகின்றா ரெனினுமமையும். அருவுருவமான சதாசிவ மூர்த்தமுமன்று எனற்கு “அருவல” என்கின்றார். சுவை மிக்க நன்பொருளும் மிக்கவிடத்துத் தெவிட்டியுவட்டுமாதலால், “உவட்ட நன்றல” எனவுரைக்கின்றார். விந்து தத்துவத்தில் விளங்கும் சத்தி யுருவுமன்று, நாத தத்துவத்தில் சிறப்புறும் சிவனுருவுமன்று என்றற்கு “விந்து நாதமுமல” என இசைக்கின்றார். ஓராற்றால் காணப்படுவதும் காணப்படாமையும்பற்றி, “இவையனைத்தும் பொன்றல் என்று அறிந்து கொள்க” என்கின்றார். பொன்றல் - மறைதல். “ஒன்றல” என்பது முதல் “விந்து நாதமும் அல” என்பதீறாக அண்ணச் சொல்லால் மறுக்கப்பட்ட கருத்துக்கட்குத் தெளிவுணர்த்தும் வகையில் உண்மை நிலை யுரைக்கின்றாராகலின், “உட்புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே என்றல்” எனவும், இதனை விநாயகப்பெருமான் அறிவுறுத்தாரென்பார், “அறிநீ என்றனை” எனவும் இயம்புகின்றார். இப்பாட்டிற் காணப்படும் கருத்துக்கள் பலவும் விநாயக புராணத்துள் விரியக் கூறப்படுதலால் “என்றனை சித்தி விநாயக விக்கினேச்சுரனே” என்று கூறுகின்றார்.
இதனால், விநாயகப் பெருமான் சிவமொன்றே அகத்தும் புறத்தும் அகண்ட பூரணமாம் என அறிவுறுத்தவாறாம். (7)
|