2527. கேவல சகல வாதனை அதனால்
கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
ஓவற மயங்கி உழலும் இச் சிறியேன் உன்
அருள் அடையும்நாள் உளதோ
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே
பரமசிற் சுகபரம் பரனே
மேவுறும் அடியார்க் கருளிய சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: பாக்கள் புனைய வல்ல புலவர் மனத்தின்கண் பரந்து நிறைந்து விளங்கும் பூரணப் பொருளாய், மேலான ஞானவின்பத்தை நல்கும் பரம்பொருளாய் விளங்கும் நின்பால் அன்பு செய்யும் மெய்யடியார்க்கு அருள் வழங்கிடும் சித்தி விநாயக விக்கினேச்சுரனே, கேவலம் சகலம் எனப்படும் அவத்தைகளால் கீழ்மை எய்தும் துன்பக் கடலில் அழுந்தி, இடையறவின்றி மயங்கி வருந்தும் சிறியவனாகிய எனக்கு உன்னுடைய திருவருள் எய்தும் காலம் உண்டாகுமோ, அருள் புரிக. எ.று.
பாவலர் - பாட்டுக்கள் பாட வல்ல புலவர். பாடப்படும் பொருள் முற்றும் மனத்தின்கண் நிறைந்தாலன்றிப் பாடல் பிறவாதாகலின், “பாவலருளத்தில் பரவிய நிறைவே” என்கின்றார். பரவராயினார் மனத்தின்கண் அன்புடன் பரவிப் பாடப்படும் நிறை பொருளே எனினும் அமையும். உண்மை ஞானத்தால் உண்டாகும் இன்பநிலை மிக்க மேன்மையுடைத்தாகலின், “பரம சிற்சுகம்” என்றும், அதனை நல்குவது யாவர்க்கும் மேலான பரம்பொருளாதலின் “பரம் பரனே” என்றும் இயம்புகின்றார். மேவுதல் - விரும்புதல். மெய்யடியார் வேண்டுவதை வேண்டியவாறு அருளுதலால், விநாயகப் பொருமானை, “மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி விநாயக” என விளம்புகின்றார். கேவலம், மலப்பிணிப் பொன்றே கொண்டு அறிவு செயலற்றுக் கிடக்கும் நிலை. சகலம் - உடல் கருவி கரணம் உலகம் ஆகியவற்றோடு கூடி வாழும் நிலை. இரண்டிலும், தூய்மையும் இன்பமும் இன்மையின், “கீழ்ப்படும் அவக்கடல்” என்று கூறுகின்றார். ஓவற மயங்கல் - தெளிவு சிறிதுமின்றி மயக்கமுற்றுக் கிடத்தல். இந்நிலையால் சிறுமையே எய்துமாறு பற்றி “சிறியேன்” என்று செப்புகின்றார்.
இதனால், கேவல சகல நிலைகளின் அவமாம் தன்மை அறிவித்தவாறாம். (10)
|