2528. கானல்நீர் விழைந்த மான்என உலகக்
கட்டினை நட்டுழன் றலையும்
ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை
ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
ஊனம்ஒன் றில்லா உத்தமர் உளத்தே
ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: குற்றமில்லாத உத்தமர்களாகிய சான்றோர் மனத்தின்கண் ஓங்குகின்ற சிறப்பையுடைய ஓங்காரத்தின் ஓளியாய்த் திகழ்பவனும், வேல் விளங்கும் கையையுடைய முருகப் பெருமானுக்கு இனியவனுமாகிய சித்தி விநாயக விக்கினேச்சுரக் கடவுளே, கானலிடத்தே தோன்றும் நீரை விரும்புகின்ற மானைப் போல உலகியல் செய்கின்ற கட்டினை விரும்பியலையும் இழிந்த வஞ்சம் பொருந்திய நெஞ்சினையுடைய புலையனாகிய என்னை நீ அன்புடன் ஏற்றருளும் இன்ப நாள் எனக்கு உண்டாகுமோ, கூறியருள்க. எ.று.
ஊனம் - ஞான வொழுக்கங்களில் உண்டாகும் குறைபாடுகளும் குற்றங்களும். ஒன்று, சிறிதும். ஒன்றென்றழிச் சிறப்பும்மை தொக்கது. உத்தமர், “ஊனமிலராகியுயர் நற்றவ மெய் கற்றவை யுணர்ந்த அடியார்” என ஞானசம்பந்தர் உரைக்கும் பெருமக்கள். பிரணவம், ஓங்காரத்தின் உருவாய் ஞானவெளி செய்தலால், விநாயகப் பெருமானை, “ஓங்கு நீர்ப் பிரணவ வொளி” என வுரைக்கின்றார். “உய்ய வென்னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (சிவபுரா) என மணிவாசகனார் கூறுவதறிக. வேலிருந்து விளங்கும் கையனாதலால். முருகனை, “வேல் நவில் கரத்தோர்” எனவும், அவன் வள்ளிநாயகியாரை மணத்தற்கு இனிய உதவி செய்தது பற்றி “இனியவா” எனவும் இயம்புகின்றார். கானல் நீர் - கானலிடத்தே தோன்றும் நீர். கானல் - வெயிற் காலத்தே வெறு வெளியில் நீர்நிலை போல் தோன்றும் பொய்க் காட்சி. கானல் போல் உளது போலத் தோன்றி மறையும் இயல்பு பற்றி, உலகியற் பிணிப்பை “கானல் நீர் விழைந்த மான் என வுலகக் கட்டு” என்று கூறுகின்றார். கானலிடத்தே தோன்றும் நீர் நிலையை மெய்யென எண்ணி மானினம் அதனை நாடி யலையும் என்பது மரபு. நட்டு - விரும்பி. கானற் காட்சியின் வஞ்ச மறியாது அதன்பின் சென்றலைந்து வருந்தும் மான் போல நெஞ்சம் உலகியற் காட்சிகளிற் பிணித்து வருத்தும் வஞ்சம் அறியாது உழலுவது கொண்டு, “உலகக் கட்டினை நட்டுழன்றலையும் ஈன வஞ்சக நெஞ்சகப் புலையனேன்” எனத் தம்மை நொந்து கொள்ளுகின்றார். வஞ்சம், வஞ்சகம் - என வந்தது. நெஞ்சு தரும் காட்சி வஞ்சமாய் இழிவு செய்தல் விளங்க, “ஈன நெஞ்சகம்” என்றும், அதனை விரும்பி யலைந்து வருந்தும் புன்மை பற்றி, தம்மைப் “புலையனேன்” என இழித்துரைக்கின்றார். தமது குற்றத்தை நோக்க, விநாயகரது திருவடிப் பேறு பெறலரிதாய்த் தோன்றுதலின், “ஏன்று கொண்டருளும் நாள் உளதோ” என மொழிகின்றார்.
இதனால், நெஞ்சினால் வஞ்சிக்கப்பட்டுத் தாம் வருந்தும் திறம் கூறியவாறாம். (11)
|