2533. விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்
வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன்
கனவிலும் நனவிலும் மறவேன்
தண்அருட் கடலே அருட்சிவ போக
சாரமே சராசர நிறைவே
வண்ணமா மேனிப் பரசிவ களிறே
வல்லபைக் கணேசமா மணியே.
உரை: குளிர்ந்த அருட் கடலாகியவனும், திருவருட் சிவபோகத்தின் சாரமாகியவனும், நிறைந்து நிற்பவனும், அழகிய திருமேனியையுடைய பரசிவத்தின் கூறாகிய களிறாயவனும், வல்லபையம்மையின் கணவனுமாகிய கணேச மாமணியே, ஞான மேன்மையால் தேவர்கள் புகழ்கின்ற மெய்கண்ட தேவர்க்கும் ஞானவானாகிய கபில தேவநாயனார் முதலியோர்க்கும் ஞான நாட்டம் செய்து திருவருள் புரிந்த நினது பெருமையும் கனவு நனவுகளாகிய இருநிலையினும் மறக்க மாட்டேன். எ.று.
திருவருள் என்பது தன்னியல்பின் தட்பமுடையதாகலின் கணேசப் பெருமானைத் “தண்ணருட் கடலே” என்றும், சிவயோகம் புரிந்த மெய்ஞ்ஞானிகள் பெறுகின்ற சிவபோகத்தின் திருவுருவாய்த் திகழ்தல் பற்றி, “அருட் சிவபோக சாரமே” என்றும் கூறுகின்றார். தருமை யாதீன குரு முதல்வரான குருஞான சம்பந்தர், “சிவபோக சாரம்” என்றே ஒரு ஞான நூலைச் செய்தருளியுள்ளார். அதனைச் சிறப்பிக்கும் வகையில் வள்ளற் பெருமான் கணேசப்பெருமானை, “அருட்சிவபோக சாரமே” என்று உரைக்கின்றார் போலும். கணேசப்பெருமான் திருக்காட்சி சிவபோகத்தை அவரது திருவுருவில் விளைவித்தல் கண்டு “சிவபோக சாரமே” என்று போற்றுகின்றார். சரம் - இயங்கு திணை; அசரம் - நிலைத்திணை. சராசரமாகிய இருவகைப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருப்பதால், “சராசர நிறைவே” என்று புகழ்கின்றார். மாணிக்க மணிபோலும் செம்மேனியண்ணலாதலின், “வண்ண மாமேனிப் பரசிவக் களிறே” என்று வழுத்துகின்றார். “தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய சிவஞானத்தை” “மண்ணவர் இனிதறிந்து திருவருட் பேறு எய்துமாறு செந்தமிழில் வழங்குதற்குத் திருவெண்ணெய் நல்லூரில் பொல்லாப் பிள்ளையாராய் எழுந்தருளி மெய்கண்டார்க்கு அருள் புரிந்த வரலாறுபற்றி, “விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன்” எனச் சிறப்பிக்கின்றார். வித்தகன் - நால்வகை யுபாயமும் வல்லவன்; வித்தகரைச் சதுரப்பாடுடையவர் என்பர் திருக்குறட்கு உரை கண்ட பரிமேலழகர், ஈண்டு வித்தகம் சிவ ஞானத்தின்மேல் நின்றது. பதினோராந் திருமுறையில் விநாயகப் பெருமானை கபிலதேவர், அதிராவடிகள், நம்பியாண்டர் நம்பியாகிய மூவர் பாடியிருத்தலின், “கபில னாதியர்” எனக் கூறுகின்றார். தாம் பாடியருளிய மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலையில் தமது கருத்துக்களைக் காரண காரிய முறையில் உரைப்பதுகொண்டு வடலூர் வள்ளல், “வித்தகப் கபிலன்” எனச் சிறப்பிக்கின்றார். வித்தகன், என்ற சிறப்பை ஏனையிருவர்க்கும் ஏற்றிக் கொள்க. அதிராவடிகள் பாடியது மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை; நம்பியாண்டர் நம்பிகள் பாடியது விநாயகர் திருவிரட்டை மணிமாலை. கபில முனிவரிடமிருந்து சிந்தாமணியைக் கணராசன் என்பவன் வலிந்து பறித்துக்கொண்டானாக விநாயகப் பெருமான் அவனோடு பொருது வென்று அச் சிந்தாமணியை மீண்டும் அவரிடம் திரும்பத் தந்த வரலாற்றை (விநாயகர். கபிலருக்கு வரம் தந்தது)க் குறிப்பதாகக் கூறுபவரும் உண்டு. கண்ணருள் செய்தலாவது, திருக்கண்களால் அருள் பெருக நோக்குதல். நன்றியுணர்வும் அன்பு மிகுதியும் விளங்க, “கனவிலும் நனவிலும் மறவேன்” என்று கூறுகின்றார்.
இதனால் மெய்கண்டார், கபில தேவர் முதலியோர்கட்கு விநாயகப் பெருமான் திருவருள் செய்த திறம் தெரிவித்தவாறாம். (4)
|