2534.

     நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட
          நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
     சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது
          திருஅருள் நாள்தொறும் மறவேன்
     தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற்
          றிடம்எனக் கருளிய வாழ்வே
     வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம்
          வல்லபைக் கணேசமா மணியே.

உரை:

      தேரூர்ந்து செம்மாந்து செல்லும் செல்வ வாழ்வும் நிலையிலது என்று கருதும் நல்ல மன வன்மையை எளிய எனக்கு அளித்தருளிய என் வாழ் முதலாகிய பெருமானும், கச்சணிந்த கொங்கைகளையுடைய மங்கையர் தலைவியாகிய வல்லபா தேவிக்குக் கணவனுமாகிய கணேச மாமணியே. திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் திருவமுது கொணர்ந்து உண்பிக்கத் திருவாய் மலர்ந்துண்டு சிறப்பித்துய்வித்தருளும் நின்னுடைய திருவருட் பெருமையை நான் ஒருநாளும் மறப்பே னல்லேன். எ.று.

     அரசரும் செல்வரும் தம்பால் உள்ள செல்வ மிகுதிபற்றி காலால் நடந்து செல்வதின்றித் தேர்மீதும், யானை குதிரை முதலியவற்றின்மேலும் இவர்ந்து செல்வது இயல்பாதலால், அவர்களது செல்வ வாழ்வை, “தேரையூர் வாழ்வு” எனச் சுருங்கவுரைக்கின்றார். “தேர்” என எடுத்து மொழிந்தமையால் யானையும் குதிரையும் பிறவும் பெய்துரைக்கப்படுகின்றன. “எடுத்த மொழியினம் செப்பலும் உரித்தே” என்பது தொல்காப்பியம். திரம் - நிலையுடையது. “நெடிய மொழிதலும் கடிய வூர்தலும் செல்வமன்று தம் செய்வினைப் பயன்” (நற். 210) எனச் சான்றோர் கூறுப. மண்ணக வாழ்வு வேண்டுவோர் செல்வத்தின் நிலையாமை நோக்காது அதனைப் பெரிதும் காதலித்தோம்புவதுபற்றி, “திரமல எனும் நற்றிடம் எனக்கருளிய வாழ்வே” என்று பராவுகின்றார். பொதுவகையில் மனத்திண்மையுடையாரும் செல்வம் கண்டவிடத்து அத்திண்மையிழந்து மெல்லியராவதாதலின், தாமுற்ற மனவன்மையை “நற்றிடம்” எனச் சிறப்பிக்கின்றார். திருவருள் இன்ப வாழ்வுக்கு முதல்வன் என்பதுபற்றி, “வாழ்வே” எனவுரைக்கின்றார். மங்கை நாயகி- மங்கையர்க்கரசி என்பதுபோல நின்றது. நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார்க்குப் பூசனை புரியச் சென்ற நம்பிகள் கொண்டு சென்ற திருவமுதை உண்ணுமாறு வேண்டினாராக, பிள்ளையாரும் அருள் கூர்ந்து உண்டருளிய வரலாற்றைக் குறிக்கின்றாராதலால், “நாரையூர் நம்பி அமுது கொண்டூட்ட நற்றிருவாய் மலர்ந்தருளிச் சீரை மேவுறச் செய்தளித்திடும் நினது திருவருள்” எனக் கூறுகின்றார். கணேசப்பெருமானைத் திருவமுதுண்பித்த நிகழ்ச்சியால் நம்பியாண்டார் நம்பிக்கு நிலைத்த புகழுண்டாயினமையின், “சீரை மேவுறச் செய்தளித்திடும் நினது திருவருள்” என வுரைக்கின்றார்.

இதனால், நம்பியாண்டார் நம்பிகள் நாரையூர் விநாயகப்பெருமானை யுண்பித்த திருவருள் நிகழ்ச்சியை நினைப்பித்தவாறாம்.

     (5)