2535. கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக்
குளிர்மலர் நந்தனம் காத்துச்
செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது
திருஅருட் பெருமையை மறவேன்
நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே
நற்குணத் தோர்பெரு வாழ்வே
வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல்
வல்லபைக் கணேசமா மணியே.
உரை: சிவபெருமானுக்கு இனிய அருளுருவாகிய புதல்வனும், நற்பண்புடையோர் எய்தும் பெருவாழ்வுக்குரிய முதற் பொருளாயவனும், மணம் குன்றாத மாலை யணிந்த குளிர் மேகம் போன்ற கூந்தலையுடைய வல்லபா தேவிக்குக் கணவனுமாகிய கணேசப் பெருமானே, குடமுனிவனாகிய அகத்தியனது கமண்டல நீரைச் சாய்த்து இந்திரன் சமைத்த நந்தனம் வளம் பெறற் பொருட்டு ஆறாகப் பெருகுவித்துப் பொன்னாடர் வேந்தனாகிய அவ்விந்திரனுக்கு அருள் புரிந்த திருவருள் நலத்தை என்றும் மறவேன். எ.று.
நம்பன் - சிவபெருமான். கணேசப் பெருமான் சிவனால் பெரிதும் விரும்பப்பட்ட புதல்வன் என்றற்கு “நம்பனார்க் கினிய அருள் மகப்பேறே” என்றும், குணங்களால் நன்மை சான்ற பெரியோர் எய்தும் நல்வாழ்வுக்கு முதற் காரணன் என்பார், “நற்குணத்தோர் பெருவாழ்வே” என்றும் கூறுகின்றார். வம்பு - மணம். மழை முகில் - நீர் நிறைந்து நிறம் கரிதாகிய மேகம். மகளிர் கூந்தற்குக் கருமுகிலை உவமம் கூறுவது பற்றி, “மழை முகிற் கூந்தல் வல்லபை” என்று புகல்கின்றார். அகத்திய முனிவர் குடும்பத்தில் பிறந்தவர் எனப் புராணம் கூறுவதால் அவரைக் “கும்ப முனிவன்” என்பது மரபு. கரகம் - கமண்டலம்; இது குண்டிகை எனவும் வழங்கும். இந்திரன் சமைத்த நந்தனம் நீர் வளம் பெறற் பொருட்டுக் கணேசப் பெருமான் காக்கை யுருவிற் சென்று அகத்தியரது குண்டிகை நீரைக் கவிழ்த்தாராக. அந்நீர் பெருகிக் காவிரியாய்ப் போந்து வளம் செய்தது என்பர். இந்நிகழ்ச்சியே இப்பாட்டிற் குறிக்கப்படுகிறது. நந்தனம் - இந்நாளில் நந்தவனம் என்று வழங்குகிறது. செம்பொனாடு -இந்திரன் நாடு. இவ்வருட் செயலின் மறவாப் பெருமையை யுணர்த்த, திருவருட் பெருமையை மறவேன்” என வுரைக்கின்றார். “சுரகுலாதிபன் தூய் மலர் நந்தனம் பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்” (பிரபு) எனத் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் கூறுவது காண்க.
இதனால், இந்திரன் சமைத்த நந்தனத்துக்காகக் கணேசப் பெருமான் அகத்தியர் கரகம் கவிழ்த்த செய்தியைத் தெரிவித்தவாறாம். (6)
|