2536.

     அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம்
          அம்மையர் இருவரை மணந்தே
     இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின்
          எழில்மணக் கோலத்தை மறவேன்
     பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே
          பரசிவத் தெழுபரம் பரமே
     வயன்தரு நிமல நித்தியப் பொருளே
          வல்லபைக் கணேசமா மணியே.

உரை:

      எவ்வுயிர்க்கும் நற்பயன் எய்துவிக்கும் கருணையுடைமையால் கற்பக மரம் போன்றவனும், பரசிவத்தில் தோன்றி யருளும் மேலான பரம்பொருளும், வலிமை தரும் தூய நித்தப் பொருளாயவனும், வல்லபைத் தேவிக்குக் கணவனுமாகிய கணேசப் பெருமானே, பிரமதேவன் பெற்ற சித்தியும் புத்தியுமாகிய மகளிர் இருவரையும் மணந்து கொண்டு நிலவுகின்ற அண்டங்கள் பலவும் நல்வாழ்வு பெறச் செய்தருளும் அழகிய நினது திருமணக் கோலத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன். எ.று.

     உயிர்கள் செய்யும் செயல் வகைகள் இடையூறின்றி இனிது நிறைவுறவருளும் பேரருளுடையனாதலால், “பயன் தரும் கருணைக் கற்பகத் தருவே” என்றும், சுத்த தத்துவத்துக்கு அப்பால் விளங்கும் சிவத்தைப் பரசிவம் என்றும் கூறுகிறார். பரம்பரம் - மிகவும் மேலான பொருள். வலிமைப் பொருளதாகிய வயவென்னும் உரிச்சொல் வயன் என வந்தது. நிமலம் - தூயது. என்றும் உள்ள பரம்பொருள் என்றற்கு “நித்தியப் பொருளே” என இயம்புகின்றார். கணேச மூர்த்திக்கு மனைவியராகிய சித்தி புத்தி என்ற மகளிர் இருவரையும் பிரம புத்திரிகள் எனப் பெரியோர் கூறும் கருத்தை விளக்குவாராய், “அயன் தவத் தீன்ற சித்தி புத்திகளாம் அம்மையர்” என்றும், கணேசர் திருமணம் உலகுயிர்கட்கு நலம் செய்தற் பொருட்டு நிகழ்ந்தது என்றற்கு, “இருவரை மணந்து இயன்ற அண்டங்கள் வாழ்வுறச் செய்யும் நின் எழில் மணக்கோலம்” என்றும் இயம்புகின்றார்.

          இதனால் கணேசப் பெருமான் சித்தி புத்திகளை மணந்த அருட் குறிப்புப் புலப்படுத்தவாறாம்.

     (7)