2540.

     பெருவயல் ஆறு முகன் நகல் அமர்ந்துன்
          பெருமைகள் பேசிடத் தினமும்
     திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும்
          திருஅருட் பெருமையை மறவேன்
     மருவளர் தெய்வக் கற்பக மலரே
          மனமொழி கடந்தவான் பொருளே
     வருமலை வல்லிக் கொருமுதற் பேறே
          வல்லபைக் கணேசமா மணியே.

உரை:

      மணமிகும் தேவருலகத்துக் கற்பக மரத்தின் மலர் போன்றவனும், உரையுணர்வுகளின் எல்லையைக் கடந்த பெரும் பொருளாய்த் திகழ்பவனும், மலையரசன் மகளாய் வந்த உமாதேவிக்கு ஒப்பற்ற முதல் மகனாகியவனும், வல்லபை யம்மைக்குக் கணவனுமாகிய கணேசப் பெருமானே, பெருவயல் என்னும் ஊரவனான ஆறுமுகன் என்ற பெயர் கொண்ட செல்வன் விளையாட்டு வகையில் உன்னுடைய பெருமைகளை எடுத்தோதினானாக. அவற்குத் திருவருள் நலமும் பெருமையும் நாடோறும் உண்டாகத் திருவுளம் கொண்ட உனது சிறப்பை ஒருநாளும் மறக்க மாட்டேன். எ.று.

     தேவருலகத்துக் கற்பக மரமாதலின், அதன் பூவினுடைய நறுமணத்தைச் சிறப்பித்து “மருவளர் தெய்வக் கற்பக மலரே” என்று புகழ்கின்றார். மலர் போல்வதுபற்றி “மலரே” என்று கூறுகிறார். “வாக்கு மனம் கழிய நின்ற பரம்பொருளாதல் தோன்ற, “மனமொழி கடந்த வான் பொருளே” எனவுரைக்கின்றார். வான் பொருள் - பரம்பொருள். மலைவல்லி - மலையரசன் மகளாகிய உமாதேவி. உமாதேவிக்கு முதல் மகனாதலால், விநாயகரை, “மலைவல்லிக்கு ஒரு முதற் பேறே” என மொழிகின்றார். பெருவயல் - தென்னார்க்காடு மாவட்டத்து ஊர்களில் ஒன்று. இவ்வூரில் வாழ்ந்த வேளாண் குடிகளிற் செல்வமும் கல்வியும் பெற்று விளங்கியவன் ஆறுமுகன்; வடலூர் வள்ளல் அவனோடு உசாவியிருந்து அவனுடைய குணஞ்செயல்களை யறிந்தவராதலின், “பெருவயல் ஆறுமுகன்” எனவும், விளையாட்டு வகையில் உரையாடும் போதும் விநாயகப் பெருமான் சிறப்பையே கூறுவது வழக்கமாதலைக் கண்டிருந்தமையின், “நகல் அமர்ந்து உன் பெருமைகள் தினமும் பேசித் திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமை” எனவும் இயம்புகின்றார். நகல் - விளையாட்டு. “தினமும் பேசிட” என இயையும். திருவளர் மேன்மை - திருவருளால் உண்டாகும் பெருமை. கணேசப் பெருமான் தமது திருவுள்ளத்தில் பெருவயல் ஆறுமுகனார்க்குத் திருவருளும் செல்வ வளமும் பெருகுமாறு நினைந்தருளுகிறார் என்பது கருத்து.

     இதனால் பெருவயல் ஆறுமுகனுக்குக் கணேசப் பெருமானது திருவருள் பெருகும் திறம் கூறியவாறாம்.

     (12)