2544. நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின்
நேயத் தால்கலி நீங்கிய ஆறுகேட்
டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன்
அடிய னேன்பிழை ஆயிர மும்பொறுத்
தீண்ட வாவின்ப டிகொடுத் தென்னைநீ
ஏன்று கொள்வதற் கெண்ணுதி யாவரும்
வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
உரை: யாவராலும் விரும்பப்படுகின்ற வாழ்வு நல்கும் பெரிய தெய்வமாகிய சித்தி விநாயக வள்ளற் பெருமானே, நெடுமால் மலைப்பாம்பாகிக் கிடந்து நின்பால் கொண்ட பேரன்பால் நினது அருள் நலத்தால் அத் துன்பம் நீங்கிய செய்தியறிந்து நின்னையே அடைக்கலமாக அடைந்தேன்; ஆண்டவனே, நினக்கு அடியவனாகிய யான் செய்த பிழை ஆயிரமாயினும் பொறுத்தருளி என் மனத்தில் எழும் விருப்பப்படி நினது திருவருளை நல்கி என்னையும் நின் அடியாருள் ஒருவனாகக் கொள்ளுதற்குத் திருவுள்ளம் செய்தருள்க. எ.று.
துன்பமின்றி இன்பமே நிறைந்த வாழ்வையே யாவரும் விரும்புவராதலின், அதனை “யாவரும் வேண்டு வாழ்வு” என்றும், வேண்டுவார்க்கு அதனை யளித்தாளும் பெருமானாதலின், விநாயகப்பெருமானை, “வாழ்வு தரும் பெருந் தெய்வமே” என்றும் எடுத்துரைக்கின்றார். விநாயகர் தோற்றமே வழிபடுவோர் துயர் கெடுத்தருளும் குறிப்புடைய தென்பதை, “தனது அடி வழிபடுமவர் இடர் கடி கணபதி வர அருளினன்” (வலிவலம்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. திருமாலை நெடுமால் எனவும் வழங்கப்படுவது பற்றி, “நீண்டமால்” என்றும், சிவனும் பார்வதியும் சூதாடிய போது பொய்ச் சான்று கூறிய குற்றத்துக்காகக் குருட்டு மலைப்பாம்பாயினார் என்ற விநாயகபுராணம் கூறுவதால், “அரவாகிக் கிடந்து” என்றும், அந்நிலையில் திருமால் விநாயகப் பெருமானை நினைந்து அன்பு, செய்தமையை விதந்து “நின் நேயத்தால்” என்றும், விநாயகப்பெருமான் திருவருளால் திருமால் அப் பாம்புரு நீங்கி இன்புற்ற செய்தி இனிது விளங்க, “கலி நீங்கியவாறு கேட்டு” என்றும், நினது திருவருள் நலமுணர்ந்து யான் நினது திருவடியை விரும்பியடைந்தேன் என்பாராய், “ஆண்டவா நின் அடைக்கல மாயினேன்” என்றும் கூறுகின்றார். பிழைசெய்வதும் அதனால் வருத்த முறுவதும் மக்கட் கியல்பாதலின், “அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து” எனவும், பிழைநீங்கினோர்க்கு இன்ப விழைவு தானே எய்துமாகலின், அதனை நல்குக என வேண்டுதலின், “ஈண்டு அவாவின்படி கொடுத்து என்னை நீ ஏன்று கொள்ளுதற்கு எண்ணுதி” எனவும் உரைக்கின்றார். பிழை பொறுக்கப் பட்டார் இன்ப மெய்துபவாயினும், பொறுத்தவர் உள்ளம் அவரைக் காணும்தோறும் பிழையை நினைக்குமாதலின், அதனைத் தவிர்த்து அடியாருள் ஒருவனாக ஏற்றருளல் வேண்டுமெனப் பரவுகின்றாராதலின், “என்னை நீ ஏன்று கொள்ளுதற் கெண்ணுதி” என்று வேண்டுகின்றார். எண்ணுதி என்பது ஈண்டு வியங்கோட் பொருளில் வந்தது. ஆயிரம், மிகுதி குறித்தது.
இதனால் பிழையாயிரம் பொறுத்து அடியருள் ஒருவனாக ஏற்றருள்க என வேண்டிவாறாம். (4)
|