2545.

     தஞ்சம் என்றுனைச் சார்ந்தனன் எந்தைநீ
          தானும் இந்தச்ச கத்தவர் போலவே
     வஞ்சம் எண்ணிஇ ருந்திடில் என்செய்வேன்
          வஞ்சம் அற்றம னத்துறை அண்ணலே
     பஞ்ச பாதகம் தீர்த்தனை என்றுநின்
          பாத பங்கயம் பற்றனன் பாவியேன்
     விஞ்ச நல்அருள் வேண்டித்த ருதியோ
          விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:

      விளக்கமுறும் சித்திவிநாயகப் பெருமானே, வஞ்சனை முதலிய குற்ற நினைவுகள் இல்லாத மனத்தின்கண் எழுந்தருளும் அண்ணலே, ஐவகைப் பாதகங்களைப் புரிந்தவர்கட்கும் அவற்றைப் போக்கி நின் திருவருளை நல்கினாய் என்று பண்டையோர் கூறுவதால், பாவியாகிய யான் என் பாவம் கெடல் வேண்டி நின் திருவடித் தாமரையைப் பற்றி வழிபடுகின்றேன்; நினது நல்லருளை மிகவும் தருவாயோ? அருள் பெறல் எளிதென்று எண்ணி, எந்தையே உன் திருவடியை அடைந்துள்ளேன்; நீயும் இந்த உலகினர் போன்று வஞ்சனையுற்று வாளா இருப்பாயேல் யான் யாது செய்வேன். எ.று.

          தஞ்சம் - எளிமை. பேரருளாளனாதலால் விநாயகப் பெருமானுடைய திருவருளைப் பெறுவது என்று கருதி உனது திருமுன்பு அடைந்தேன் என்பாராய், “தஞ்சம் என்று உனைச் சார்ந்தனன்”எனவும், திருவருட் பேறு அருமையுடைத் தந்து, வருத்தம் மேவிய மனத்தராய்ப் பேசுகின்றமை புலப்பட, “நீ தானும் இந்தச் சகத்தினர் போலவே வஞ்சம் எண்ணியிருந்திடில்” எனவும் இயம்புகின்றார். மனம் வேறு சொற் செயல் வேறுபட்டொழுகுதல் வஞ்சனை; மண்ணியல் மாந்தர்க்கு வஞ்சனை புரிவது இயல்பாதலால், “இந்தச் சகத்தினர் போலவே” என்று கூறுகிறார். சகம் - நிலவுலகம். வஞ்சம் எண்ணியிருத்தலாவது, செய்வதாகச் சொல்லிச் செய்யாதொழிதல். எல்லாம் வல்ல நீயே இது செய்குவதாயின், சிற்றறிவும் சிறு செயலுமுடைய எளியனாகிய யான் ஒன்றும் செய்யவல்லேன் என விளம்பலுற்று, “என் செய்வேன்” எனக் கையறவுபடுகின்றார். கரவும் வஞ்சமும் பொருந்தியவர் மனத்தில் இறைவன் தங்குவதிலன் என்பது பற்றி, “வஞ்சமற்ற மனத்துறை யண்ணலே” என வழுத்துகின்றார். “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டருத்தியோடு உள்ள மொன்றியுள்குவார் உளத்துளான்” (ஆருர்) எனத் திருஞான சம்பந்தர் தெரிவிக்கின்றார். அண்ணல் - தன்னை அடைந்தாரை யருளும் தலைவன். பஞ்சபாதகம் - பொய், கொலை, களவு, கள், காமம் என்ற ஐவகைப் பெரும் குற்றம். மாபாதகம் புரிந்தாரும் குற்ற முணர்ந்து வருந்தி வருவாராயின், திருவருள் வழங்கி அவரை யுய்விக்கும் பெருங் கருணையாளன் எனப் பெரியோர் புகழ்வது கொண்டு “பஞ்ச பாதகம் தீர்த்தனை” என்று கூறுகின்றார். என்று - என்று புராணிகராகிய முன்னோர் கூறுவதால், மதுரையிற் சொக்கநாதன் புரிந்த திருவிளையாடல்களில் மாபாதகம் தீர்த்ததும் ஒன்று பரஞ்சோதி முனிவர் முதலிய புராணிகர் உரைப்பது எண்ணுக. பாத பங்கயம் -திருவடிகளாகிய தாமரை மலர். நல்லருள் வேண்டி விஞ்சத் தருதி என இயைக்க. வேண்டுதல் - விரும்புதல். இதனால், மாபாதகங்களைத் தீர்த்த பெருமான் எனப் புராணிகர் கூறுவது காட்டித் தமக்கும் அதுபோல் திருவருளை மிக நல்குதல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (5)