2546.

     கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான்
          கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
     துள்ளம் நின்திரு உள்ளம் அறியுமே
          ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
     வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ்
          வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
     வெள்ள வேணிப் பெருந்தகை யேஅருள்
          விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:

      கங்கை தங்கிய சடையையுடைய பெருந்தகைப் பெருமானாகிய அருளொளி திகழும் சித்தி விநாயக வள்ளலே, கள்ளம் நிறைந்த நெஞ்சை யுடையனாயினும், இப்போது கள்ளப் பண்பின்றியுரைக்கின்றேன்; எளியேனது உள்ளம் நின் திருவுள்ளத்துக்கு நன்கு தெரிந்ததாகும்; இனியும் நான் வேறு கூறுவதென்னை? காலத்தை வீணிற் போக்குதல் வேண்டா; கிண்ணம் போன்ற அழகிய தாமரை மலர் போன்ற நின் திருவடிப் புகழை யான் நாத்தழும்பேற ஓதி வாழ்த்துதற்கு அருள் புரிவாயாக. எ.று.

          வெள்ள வேணி - கங்கையாறு தங்குகின்ற சடை. “வெள்ள வேணிப் பெருந்தகை” என வரும் இத்தொடர், பிரபு லிங்க லீலையில் காணப்படுகிறது. பெருந்தகை - பெரிய தகைமை. பெருந்தகைமையாற் பிறங்கு வோனைப் பெருந்தகையென உபசரிக்கின்றார். தகை -அழகுமாம். நெஞ்சன் - நெஞ்சகன் என வந்தது; வஞ்சன் - வஞ்சகன் என வருதல் போல. ஐயன் - தலைவன். கள்ளம் கவடு முதலிய குற்ற உணர்வுகள் பொருந்துமிடமாகலின், “கள்ள நெஞ்சகன்” எனக் கூறுகின்றார். அவ்வியல்பால் தான் கூறுவனவற்றுள் கள்ளமும் பொய்யும் விரிவியிருக்கலாம் என ஆராய்ந்து தெளிந்து உரைப்பாராய், “கள்ளமின்றிக்

          கழறுகின்றேன்” எனவுரைக்கின்றார். கழறுதல் - ஈண்டு வாளா உரைத்தல் மேற்று. என் கள்ளம் புலப்படாவாறு சொல்லுவேனாயின், என்னுடைய உள்ளத்தின் உண்மையை நின் திருவுள்ளம் இனிதறியு மென்பார், “எனது உள்ளம் நின் திருவுள்ளம் அறியும்” என மொழிகின்றார். எனது உள்ளும் புறமும் நன்கறிந்த பெருமானாதலின், நின்பால் வாயாற் பல சொல்லுவது மிகையாதலால் “ஓதுகின்றதென்” என வுரைக்கின்றார். இனி எனக்குத் திருவருளை நல்காமற் காலம் கடத்தல் கூடாதென முறையிடுவாராய், “போது கழித்திடேல்” எனப் புகல்கின்றார். தாமரைப் பூ வள்ளம் போலும் வடிவினதாகலின், வள்சி மாமலர்” எனப் புனைகின்றார். மென்மைப் பண்பும் செம்மை நிறமும் பற்றி விநாயகப் பெருமான் திருவடியை, “மாமலர்ப் பாதம் “ எனவும் திருவடிப் பெருமையையே அன்பர் பன்முறையும் போற்றிப் புகழ்வது இயல்பாதல் விளங்க, “பாதப்பெரும் புகழ் நாத்தழும்பேற வாழ்த்த வழங்குவாய்” எனவும் இயம்புகின்றார். பன்முறையும் வாழ்த்துதல் நாத்தழும்பேற அருள் வழங்குக எனக் கூறுகின்றார் எனினும் அமையும்.

இதனால் விநாயகப் பெருமான் திருவடிப் புகழை நாத்தழும்பேற வாழ்த்தி வழிபடற்குரிய திருவருள் நல்குமாறு வேண்டியவாறாம்.

     (6)