2550.

     பாவி னால்உனை நாள்தொறும் பாடுவார்
          நாடு வார்தமை நண்ணிப்பு கழவும்
     ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம்
          ஓட வும்மகிழ் ஓங்கவும் செய்குவாய்
     காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக்
          கடவு ளேநற்க ருங்குழி என்னும்ஊர்
     மேவி அன்பர்க்க ருள்கண நாதனே
          விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:

      நீல மலரின் நிறத்தையுடைய கழுத்தையுடைய சிவபெருமான் கண்டு மகிழும் ஐந்து கைகளையுடைய விநாயகக் கடவுளும் நலமமைந்த கருங்குழியென்னும்மூரில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள் புரியும் கணநாதனும் புகழ் விளங்கும் சித்தி விநாயகனுமாகிய வள்ளலே, உன்னை நாடோறும் நாவினாற் பாடிப் பரவுபவரையும், எண்ணித் துதிப்பவரையும், அடைந்து அவரொடு கூடி உன்னைப் புகழவும், இடையறாது உன்னைப் பாடவும், துன்பத்திலிருந்து நீங்கவும் இன்பம் பெறவும் செய்தருளுவாயாக. எ.று.

          காவி - நீல நிறம் பொருந்திய இதழ்களையுடைய நீர்ப்பூ. களத்தான், கழுத்தையுடையவன். சிவன் நீலகண்டனாதலால், “காவி நேர் களத்தான்” என்று கூறுகின்றார். ஐந்து கைகளையுடைய தெய்வமாதல் தோன்ற, “ஐங்கரக் கடவுள்” என்கின்றார். கடவுள் என்பது எல்லாம் வல்ல பரம்பொருட்கேயுரிய சிறப்புப் பெயராயினும், பிற்காலத்தார் சொற் பொருளை நோக்கி, உலகியலறிவெல்லையையும் பற்று நுகர்வுகளையும் கடந்த மேலோர்களையும் கடவுள் என்பாராயினர். விநாயகர் கடவுட் கூறாகலின், “ஐங்கரக் கடவுளே” என்று சிறப்பிக்கின்றார். வளங்களால் நலம் அமைந்த தென்றற்கு “நற்கருங்குழி என்னுமூர்” எனவுரைக்கின்றார். அங்கே அன்பர்கள் எடுத்த திருக்கோயிலில் எழுந்தருளுவதால், “அன்பர்க்கு அருள் கணநாதன்” என இயம்புகிறார். சிவகணங்கட்குத் தலைவன் -கணநாதன்; “கணபதியென்னும் களிறு” எனச் சான்றோர் வழங்குவதுண்டு. உனை நாவினாற் பாடுவார் என இயையும் நாவினாற் பாடுவார் என்பது தாமே சொன்மாலை தொடுத்துப் பாடும் அன்பரென்பதுணர நின்றது. நாடுவார் - அன்பால் மனத்தின்கண் நினைந்து போற்றுபவர். இருதிறத் தன்பர்களையும் அடைந்த வழி இனப் பண்பால் நினைவு சொல் செயல் மூன்றும் அன்பு நெறிக்கண் இயங்குமாதலின், “நண்ணிப் புகழவும் பாடவும்” எனக் கூறுகின்றார். புகழ்தல், புகழை யுரைத்தல். ஓவுதல் - இடையறவு படுதல். புகழ்உரைத்தலும் பாடுதலும் உற்ற துன்பங்களை மறப்பித்தலின், “துன்பெலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும்” என்றும், இந் நலமெல்லாம் விநாயகப் பெருமான் திருவருளால் எய்துவது பற்றி, “செய்குவாய்” என்றும் வேண்டுகின்றார்.

     இதனால் அன்பரொடு கூடி இறைவன் புகழையுரைக்கவும் பாடவும் இவ்வாற்றால் துன்பமின்றி இன்ப முறவும் திருவருள் புரிக என முறையிட்டவாறாம்.

     (10)