2556.

     திருமால் வணங்கத் திசைமுகன்
          போற்றச் சிவமுணர்ந்த
     இருமா தவர்தொழ மன்றகத்
          தாடு மிறைவடிவாக்
     குருமா மலர்ப்பிறை வேணியு
          முக்கணுங் கூறுமைந்து
     வருமா முகமுங்கொள் வல்லபை
          பாகனை வாழ்த்துதுமே.

உரை:

      திருமால் வணங்கவும் பிரமன் போற்றவும், சிவஞான முணர்ந்த பெரிய தவத்தோராகிய வியாக்கிர பாதர் பதஞ்சலியென்ற முனிவர் இருவரும் கைதொழுதேத்தப் பொற் சபையின்கண் நின்றாடும் சிவனாகிய இறைவன் குறிகளாகிய நிறமுடைய கொன்றை மலரும், பிறைத்திங்களும் சடையும் முக்கண்ணும், வலிமை மிக்க யானை முகமும் கொண்ட வல்லபை கணவனாகிய கணேசப் பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக. எ.று.

     திருமால் கிடந்தும் பிரமன் நின்று வேதமோதியும் பரவினமையின், “திருமால் வணங்கத் திசைமுகன் போற்ற” என்றும், சிவபேறுடைய பெருமக்களைச் சிவமுணர்ந்தாரென்பது பற்றி, முனிவர் இருவரையும் “சிவமுணர்ந்த இருமாதவர்” என்றும் கூறுகின்றார். வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் சிவனது திருநடம் காண்டல் வேண்டித் தவம் கிடந்தனரெனக் கோயிற் புராணம் கூறுவதுபற்றி, அவர்களைச் “சிவமுணர்ந்த இருமாதவர்” எனப் புகல்கின்றார். சிவத் திருமேனியிற் காணப்படும் மலரும் பிறையும் பிறவும் விநாயகர் திருவருள் உருவினும் காணப்படுதலால், “இறை வடிவாக் குருமா மலர்ப்பிறை வேணியும் முக்கண்ணும்” எனவுரைக்கின்றார். சிவன் வடிவை - இறை வடிவு என்கின்றார், குரு - நிறம். ஈண்டுப் பொன்னிறம். வேணி - சடை. கூறுதல் - புகழ்ந்தோதுதல். மைந்துவரும் மா - வலி மிக்க யானை. வல்லபை பாகன் - வல்லபைக்குக் கணவன்.

     இதனால், வல்லபை கணேசமூர்த்தியை வணங்கி வாழ்த்துக் கூறியவாறாம்.

     (6)