2558. திருமால் அறியாச் சேவடி யாலென்
கருமால் அறுக்குங் கணபதி சரணம்.
உரை: திருமால் முதலிய தேவர்களும் அறிந்தடைய முடியாத சிவந்த திருவடியால் பிறவி மயக்கத்தைப் போக்கும் கணபதியாகிய விநாயகர் திருவடி நமக்குக் காப்பாகும். எ.று.
திருமால் முதலிய தேவர்கள் குறைவிலா நிறைவின்மையாற் செத்துப் பிறக்கும் சிறுமையுடையாராதலால், “திருமால் அறியாச் சேவடி” என்றும், விநாயகப் பெருமானது திருவடி ஞானம் பிறப்பறுக்கும் பெருமையுடைய தென்றற்கு, “சேவடியால்”, “என் கருமால் அறுக்கும் கணபதி” என்றும் இசைக்கின்றார். கரு - பிறப்பு. மால் - மயக்கம். புகலடைந்தார்க்கு அரணாய் நின்று காத்தலை செய்யும் என்றற்குச் “சரணம்” என்கின்றார்.
இதனால் விநாயகன் திருவடி, பிறவி மயக்கறுக்கும் பெருமையுடைய தென்றவாறாம். (2)
|